பெங்களூரு

பொதுமக்களிடம் வரவேற்பைப் பெறும் அஞ்சலக சேமிப்புக் கணக்கு!

வங்கிப் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், அஞ்சலக சேமிப்புக் கணக்கு அனைவரிடமும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ந.முத்துமணி

வங்கிப் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், அஞ்சலக சேமிப்புக் கணக்கு அனைவரிடமும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் இனிமேல் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக ரூ.5 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பரிவர்த்தனை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இலவச பரிவர்த்தனைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மறைமுகக் கட்டணங்களும் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சேமிப்புக் கணக்கு வைத்திருப்போரின் கவனம் அஞ்சலக சேமிப்புக் கணக்கு பக்கம் திரும்பியுள்ளது.
 அஞ்சலகங்களில் ஏடிஎம் அட்டையுடன் கூடிய சேமிப்புக் கணக்கை தொடங்க ரூ.50 போதுமானதாக இருக்கும். அதாவது, அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்க குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 மட்டுமே.
காசோலையுடன் கூடிய சேமிப்புக் கணக்கில் மட்டும் குறைந்தபட்சமாக ரூ.500 இருப்பு வைத்திருக்க வேண்டும். அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒரு லட்சம் பேருக்கு ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் அஞ்சல் துறையின் 76 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இதில் 14 ஏடிஎம் மையங்கள் பெங்களூரில் உள்ளன. அஞ்சல் துறையின் ஏடிஎம் மையங்களில் எத்தனைமுறை வேண்டுமானாலும், பரிவர்த்தனை செய்யலாம். அதற்கு கட்டணம் எதுவுமில்லை.
ஒருநாளில் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை ஏடிஎம் மையங்கள் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதுதவிர, இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி வழியாகவும் சேமிப்புக் கணக்குகளைக் கையாளும் வசதியைத் தொடங்க அஞ்சல் துறை திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து கர்நாடக அஞ்சல் வட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு, தனியார் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை, பரிவர்த்தனைக் கட்டணங்கள், மறைமுகக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதும் அஞ்சலகத்தின் சேமிப்புக் கணக்குக்கு மவுசு பெருகியுள்ளது.
இதனால், தினமும் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலக சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கிவருகிறார்கள். கடந்த 5 மாதங்களில் மட்டும் 50 ஆயிரம் ஏடிஎம் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளோம்.
அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் பிற வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் இருந்தும் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் 23,292 அஞ்சலகங்களில் கணினிவழி பரிவர்த்தனைகள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் நாடு முழுவதும் 970 ஏடிஎம் மையங்கள் இயங்கி வருகின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள அஞ்சல் துறை, ஏடிஎம் மையங்களை அதிகரிக்கவுள்ளது.  அஞ்சல் துறையின் சேமிப்புக் கணக்கு தொடங்க ஆர்வம் காட்டியுள்ள பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் அஞ்சலக வங்கிகளை விரும்பத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து வாடிக்கையாளர் எஸ்.மஞ்சுநாத் கூறுகையில், நகர்ப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வலியுறுத்துகின்றன.
குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறினால் ரூ.50 முதல் ரூ.100 வரை(சேவை வரி தனி)அபராதம் விதிக்கின்றன. மேலும், பாரத ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் இலவசமாக பணம் எடுக்க இயலாது.
அதற்கும் பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மாத ஊதியம் பெறுவோர் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் இருப்புத் தொகையைப் பராமரிப்பது கடினமாகும். எனவே, பிற வங்கிகளில் இருந்த சேமிப்புக் கணக்கை மூடிவிட்டு, அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கியுள்ளேன் என்றார்.
இந்தியாவின் மூலைமுடுக்குகளில் செயல்பட்டுவரும் அஞ்சலகங்களில் வங்கி சேவைகள் கிடைக்கின்றன. எனவே, அங்கு சேமிப்புக் கணக்குகளைத் தொடங்குவது எளிதாகும். ஊரக தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் திட்டத்தின்கீழ் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
ரொக்கம் செலுத்துதல், ரொக்கம் எடுத்தல், இருப்பு தகவல் உள்ளிட்ட சேவைகளை வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கவும் அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இத் திட்டத்தின் சோதனை முயற்சி கர்நாடக மாநிலத்தின் சென்னப்பட்டணாவில் உள்ள அஞ்சலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் அஞ்சலகங்களுக்கு நேரடியாக வரமுடியாத மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்று அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT