பெங்களூரு

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதில் ரூ.300 கோடி ஊழல்: எடியூரப்பா குற்றச்சாட்டு

DIN

கர்நாடக உயர் கல்வித் துறையில் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கியதில் ரூ.300 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான எடியூரப்பா குற்றஞ்சாட்டினார்.
வட கன்னட மாவட்டம், பட்கல் வட்டம், முருடேஸ்வராவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றத்திற்கான பேரணியில் பங்கேற்று அவர் பேசியது:
பெலகாவியில் ரூ. 450 கோடியில் சுவர்ண செளதா கட்டப்பட்டது. இதில் நவ.13-ஆம் தேதி முதல் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருவது வேதனை அளிக்கிறது.
சுவர்ண செளத கட்டப்பட்டு  முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே கடன் பிரச்னையால் விவசாயி காந்தலிங்கா முனவள்ளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து விவசாயிகளின் வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார். ஆனால், அவர் கூறியபடி தேசிய வங்கி உள்ளிட்டவைகளில் முழுமையான கடனை தள்ளுபடி செய்யாமல், கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால், விவசாயிகள் தொடர்ந்து கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர். ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. மாநிலத்தில் பயங்கரவாத அமைப்புகள் வளர்வதற்கும் சித்தராமையா தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.
இதனால் மாநில அளவில் பயங்கரவாதம் தலைதூக்கி வருகிறது. உயர் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்பட்டதில் ரூ. 300 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கு பொறுப்பேற்று அத்துறை அமைச்சர் பசவராஜராய ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
டிஎஸ்பி கணபதி தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜும், வருமானவரித் துறை சோதனையில் பலகோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியுள்ளதையடுத்து அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT