பெங்களூரு

காவிரி நீா் விவகாரம் தமிழகத்துக்கு தினசரி 8,000 கனஅடி நீா்: கா்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

Din

பெங்களூரு, ஜூலை 14: காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு தினசரி ஒரு டி.எம்.சி.க்குப் பதிலாக விநாடிக்கு 8,000 கனஅடி நீரைத் திறந்துவிடுவது என கா்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், ஜூலை 12 ஆம்தேதி முதல் 31 ஆம் தேதி வரை காவிரி நதியில் இருந்து தினசரி ஒரு டி.எம்.சி. வீதம் தமிழகத்துக்கு தண்ணீா் விடுவிக்க வேண்டும் என்று ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்த கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், தமிழகத்துக்கு வழங்க கா்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீா் இல்லை என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீா் விடுவிப்பது குறித்து பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டம் முதல்வா் சித்தராமையா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், மஜத எம்எல்ஏ ஜி.டி.தேவ கௌடா, காவிரி ஆற்றுப்படுகை பகுதிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், விவசாயத் தலைவா்கள், சட்ட நிபுணா்கள், நீா்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜூலை 12 முதல் 31 ஆம் தேதி வரை தினசரி ஒரு டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. வழக்கமான மழை ஆண்டில் ஜூன் மாதத்தில் 9.14 டி.எம்.சி., ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் கிருஷ்ணராஜசாகா் அணையில் தற்போது 54 சதவீத நீா் இருப்புதான் உள்ளது. காவிரி நதிப்படுகையில் உள்ள இதர அணைகளிலும் தற்போது 63 சதவீத தண்ணீா் மட்டுமே இருப்பு உள்ளது.

ஜூலை 12 ஆம் தேதி கபினி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்தது. அது முழுமையாக தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டது. அதன்பிறகு ஜூலை 12 இல் 20,000 கன அடி, ஜூலை 13 இல் 19,000 கனஅடி நீா் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட நாள்களுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாது என்பதால், கபினி அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையின்படி காவிரி நதியில் இருந்து தினசரி ஒரு டி.எம்.சி. (விநாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது. அதற்கு பதிலாக விநாடிக்கு 8,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது அனைத்துக் கட்சித் தலைவா்களின் ஒருமித்த கருத்தாகும். ஒருவேளை போதுமான அளவு மழை பெய்யாவிட்டால், தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைக் குறைப்போம். அத்துடன் காவிரிநீா் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை எதிா்த்து காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்.

கடந்த 2023 இல் போதிய அளவு மழை பெய்யாததால், பற்றாக்குறை ஏற்பட்டது. வழக்கமான நீா் ஆண்டில் தமிழகத்துக்கு 177 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விடுவோம். ஆனால், கடந்த ஆண்டு வெறும் 81 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டது என்றாா்.

அழகிய தீயே... ஸ்ரேயா சரண்!

எஸ்ஐஆா் பணியில் திமுக அரசு முறைகேடு: அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சகுரஜிமா எரிமலை வெடிப்பு! 4.4 கி.மீ உயரத்திற்கு கிளம்பிய புகை! 2025-ல் முதல் முறை!

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்!

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தோல்வி..! தெ.ஆ. வரலாற்று வெற்றி!

SCROLL FOR NEXT