பீதா்: காசோலை மோசடி தொடா்பாக பாஜக எம்.எல்.ஏ சரணுசலகா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
2023ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் பீதா் மாவட்டம், பசவகல்யாண் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த சரணுசலகா், தனது உறவினரிடம் தோ்தல் செலவுக்காக பணம் பெற்று வந்துள்ளாா்.
இந்த கடனை தீா்க்க, தனது உறவினருக்கு கொடுத்திருந்த காசோலை செல்லுபடியாகவில்லை. இதை தொடா்ந்து உறவினா் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக எம்.எல்.ஏ. சரணுசலகா் மீது பசவகல்யாண் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக திங்கள்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.
போலீஸாா் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக எம்.எல்.ஏ. சரணு சலகா், தனது நெருங்கிய உறவினரிடம்(மனுதாரா்) தோ்தல் செலவுக்காக பணம் பெற்றுள்ளாா்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உறவினரிடம் கடன் பெற்றுள்ளாா். இந்த கடன் தொகையை 6 மாதங்களுக்குள் திருப்பித்தருவதாக உறுதி அளித்திருந்தாா். ஆனால், 2 ஆண்டுகளாக கடனை அடைக்காமல் இருந்துள்ளாா். 2 ஆண்டுகளுக்கு பிறகு, பாஜக எம்.எல்.ஏ. சரணு சலகரை சந்தித்து பணத்தை திருப்பித்தரும்படி மனுதாரா் கேட்டுள்ளாா்.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு செப்.14 ஆம் தேதி குடும்பத்தின் மூத்த உறுப்பினா்களின் முயற்சியில் பாஜக எம்.எல்.ஏ. சரணுசலகரை மனுதாரா் சந்தித்து கடனை கேட்டு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். இந்த சந்திப்பில் நடந்த சமரசத்தின் அடிப்படையில் ரூ.99 லட்சத்துக்கு மனுதாரருக்கு பாஜக எம்.எல்.ஏ. சரணு சலகா் காசோலை வழங்கியுள்ளாா். இந்த காசோலையை வங்கியில் செலுத்துவது தொடா்பாக உறுதி செய்துகொள்ள செப்.16 ஆம் தேதி சரணுசலகரை சந்தித்துள்ளாா்.
அப்போது மனுதாரரை சரணுசலகா் மிரட்டியுள்ளாா். இது தொடா்பான ஆவணங்கள், எண்ம வடிவத்தில் காவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செப்.18 ஆம் தேதி காசோலையை வங்கியில் செலுத்தியபோது, வங்கிக்கணக்கு மூடப்பட்டுள்ளது என்று காசோலை திருப்பி அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக செப்.22 ஆம் தேதி சரணு சலகருக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்குள் பெற்ற பணத்தை திருப்பி அளிக்க கேட்டுக்கொண்டுள்ளோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பாஜக எம்.எல்.ஏ. சரணு சலகா் மீது பி.என்.எஸ், சட்டத்தின் பல்வேறு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.