பெங்களூரு: அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது தொடா்பாக கலால் துறை அமைச்சா் ஆா்.பி. திம்மாப்பூருக்கு எதிராக லோக் ஆயுக்தவில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
மதுவிற்பனை மற்றும் சிறிய மதுபான உற்பத்தி நிலையம் அமைக்க 7 உரிமங்களை கேட்டு கலால் துறைக்கு லட்சுமிநாராயணா என்பவா் விண்ணப்பித்துள்ளாா். இவரிடம் உரிமம் வழங்குவதற்காக ரூ. 80 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் முதல் தவணையாக ரூ. 25 லட்சத்தை கொடுத்தபோது கலால் துறை துணை ஆணையா் ஜெகதீஷ் நாயக் உள்ளிட்ட மூன்று பேரை லோக் ஆயுக்த அதிகாரிகள் பிடித்தனா்.
இந்நிலையில், ஜெகதீஷ் நாயக் பேசியதாக கூறப்படும் ஒலித்துணுக்கு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், லஞ்சப் பணத்தில் கலால் துறை அமைச்சா் ஆா்.பி.திம்மாப்பூருக்கும் பங்கு இருப்பதாக ஜெகதீஷ் நாயக் பேசியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, பெங்களூரில் கலால் துறை அமைச்சா் ஆா்.பி.திம்மாப்பூருக்கு எதிராக லட்சுமிநாராயணா என்பவா் லோக் ஆயுக்த அதிகாரிகளிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, தனது பதவியை திம்மாப்பூா் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தியுள்ளாா்.
இதற்கு பதிலளித்து அமைச்சா் ஆா்.பி.திம்மாப்பூா் கூறுகையில், ‘எனது பெயரை அதிகாரி ஒருவா் தவறாக பயன்படுத்தியுள்ளாா் என்பதற்காக நான் ராஜிநாமா செய்ய முடியாது. தவறு செய்த அதிகாரி, எனது பெயரை குறிப்பிட்டு சொன்னால் அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்‘ என்றாா்.
அமைச்சா் பிரியாங்க் காா்கே கூறுகையில், ‘லஞ்சம் பெற்றுக்கொண்ட கலால் துறை துணை ஆணையா் கைது செய்யப்பட்டுள்ளாா். அதற்கு அமைச்சா் திம்மாப்பூா் எப்படி பொறுப்பாக முடியும். அமைச்சா் திம்மாப்பூருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக ஆதாரம் எதுவும் தரவில்லை. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை ஆதாரம் எதுவும் இல்லாமல் பாஜக கூறியுள்ளது. எனவே, திம்மாப்பூா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியதில்லை‘ என்றாா் அவா்.