முகப்பு
பெங்களூரு

கன்னட நடிகை அமுல்யா மஜதவில் இணைந்தார்

கன்னட நடிகை அமுல்யா, தனது கணவர் ஜெகதீஷ், மாமனார் ராமசந்திராவுடன் மஜதவில் இணைந்தார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:45 am IST
பகிர்:

கன்னட நடிகை அமுல்யா, தனது கணவர் ஜெகதீஷ், மாமனார் ராமசந்திராவுடன் மஜதவில் இணைந்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து காங்கிரஸ், பாஜகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் மஜதவில் இணைந்து வருகிறார்கள். பெங்களூரில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடாவின் தலைமையில் நடிகை அமுல்யா, தனது கணவர் ஜெகதீஷ், மாமனர் ராமசந்திராவுடன் மஜதவில் இணைந்தார்.  அமுல்யாவின் மாமனார் ராமசந்திரா, பாஜகவின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், மஜத வேட்பாளராக ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். இவர்களை தவிர பாஜக முன்னாள் எம்எல்ஏ ஹேமசந்திரசாகர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ரமேஷ், மறைந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவின் மாமனார் ஹனுமந்தராயப்பா ஆகியோரும் மஜதவில் இணைந்தனர். பி.ரமேஷ், சி.வி.ராமன்நகரிலும்,ஹேமசந்திரசாகர் சிக்பேட் தொகுதியிலும் மஜத வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நடிகை அமுல்யா கூறியது: அரசியலில் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், எனது மாமனார் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிடவிருக்கிறார். இத்தொகுதியில் நான் தீவிர பிரசாரம் செய்வேன் என்றார்.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கூறியது: பிற கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பலர் மஜதவில் இணைந்துள்ளதால் இந்நாள் எனக்கு மகிழ்ச்சியானதாகும். இதன்மூலம் மஜத பலம் பெற்று வருகிறது. மேலும் பல தலைவர்கள் மஜதவில் இணையவிருக்கிறார்கள். இம்முறை மஜத ஆட்சிக்கு வருவது உறுதி. பெங்களூரில் மட்டும் 28-இல் 12-15 தொகுதிகளை மஜத கைப்பற்றும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.