திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம்
திவிஷா சர்மா மரணத்தில் கணவன் வீட்டார் மீது சந்தேகம் இருப்பதாக புகார் - சிபிஐ விசாரணை
புது தில்லி : திவிஷா சர்மா மரணத்தில் கணவன் வீட்டார் மீது சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொள்வதே சரி என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை(மே 25) தெரிவித்தது.
சினிமா - மாடலிங் துறையைச் சேர்ந்த திவிஷா சர்மா (33) கடந்த மே 12-இல் அவரது போபால் இல்லத்திலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
திவிஷாவின் கணவர் சமர்த் சிங் ஒரு வழக்குரைஞர் ஆவார். அவரது மாமியார் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி. இந்நிலையில், திவிஷா கணவரின் குடும்பம் அவரைக் கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்த வரதட்சிணைக் கொடுமைகளைத் தாளாமல் அவர் கடந்த மே 12-இல் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
இதையடுத்து, வரதட்சிணைக் கொலைக்கு எதிராக நீதி கேட்டு திவிஷாவின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். ஆனால், வழக்கு விசாரணையில் அதிகாரிகள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததாக திவிஷா குடும்பத்தினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர்.
திவிஷாவின் உடல் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டாலும் அவரது உடலில் பல காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இல்லத்தின் முன் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய அளவில் த்விஷாவின் மரணம் எதிரொலித்தது. மேலும், திவிஷா சர்மாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அவர்கள் சர்மாவின் உடலை வாங்க மறுத்தனர். இதையடுத்து, திவிஷா மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். திவிஷாவின் கணவர் சமர்த் சிங் காவல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே, திவிஷா வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை(மே 25) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், “நாம் நமது அமைப்பின் மீது நம்பிக்கை பூண்டுள்ளோம். சுதந்திரமான முகமை ஒன்று இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.
ஏன் கிரிபாலா சிங் இப்படி சரமாரியாகக் கேள்வி கேட்கப்படுகிறார்? அவர் ஒரு முன்னாள் மாவட்ட நீதிபதியாவார். ஆனால், வழக்கு விசாரணையை நீதித்துறை தடம் புரளச் செய்வது துரதிருஷ்டவசமானது. திவிஷா சர்மா கொலையில் சித்திரிக்கப்பட்டுள்ள விஷயங்களுக்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.
இரு தரப்பினரும் விசாரணை முகமைகளிடம் சென்று தங்கள் தரப்பு வாக்குமூலத்தை அளிக்கலாம். சாட்சியங்களின் வாக்குமூலங்களை ஊடகங்கள் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அவற்றை வெளியிடவும் வேண்டாம்.
இதுவொரு துரதிருஷ்டவசமான சம்பவம். இந்த வழக்கில் ஊடகங்களின் தலையீட்டால் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நாம் எவ்வகையான சித்திரிப்புக்கும் இடமளிக்காமல் அவற்றை உருவாக்குவதை தவிர்த்தல் வேண்டும்” என்றார்.