மஜத ஆட்சி அமைப்பது உறுதி: தேவெ கெளடா
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், மஜத ஆட்சியமைப்பது உறுதி என முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், மஜத ஆட்சியமைப்பது உறுதி என முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளில் மஜத 36 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புகளில் உடன்பாடில்லை என்றாலும், மஜத பெரும்பான்மை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மாறாக, குறைந்த தொகுதிகளில் மஜத வெற்றி பெற்றாலும், மாநிலத்தில் ஆட்சி அமைப்பது உறுதி.
மஜத மாநிலத் தலைவர் குமாரசாமிக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள காங்கிரஸார், குமாரசாமி மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். எங்களை முஸ்லிம் விரோதிகள் என அடையாளப்படுத்த முயலுகின்றனர். மஜத ஒரு போது முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடாது.
சொன்னதை செய்யும் காங்கிரஸ் அரசு எனக் கூறிக் கொள்ளும் முதல்வர் சித்தராமையா, 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? அன்னபாக்யா உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்துள்ளதால், மக்கள் தன்னை தோற்கடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
1983 இல் சித்தராமையா எங்கிருந்தார்? அவரின் தற்போதைய வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை அவர் மறந்துள்ளார். லோக் ஆயுக்த அமைப்பை முடக்கி, ஊழல் ஒழிப்பு படையை உருவாக்கியவர் சித்தராமையா. அவருக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார்.