முகப்பு
பெங்களூரு

அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழி வகுப்பு: கன்னட வளர்ச்சி ஆணையம் எதிர்ப்பு

கர்நாடகத்தில் உள்ள ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளைத் தொடங்க கன்னட வளர்ச்சி ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:32 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கர்நாடகத்தில் உள்ள ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளைத் தொடங்க கன்னட வளர்ச்சி ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்திருந்த நிதிநிலை அறிக்கையில்,  "ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகள் தொடங்கப்படும்.   குறைந்த மாணவர்களைக் கொண்ட 28 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மற்றொரு பள்ளிகளுடன் இணைக்கப்படும்' என்று அறிவித்திருந்தார். 
இந்தத் திட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்த நிலையில், முதல்வர் குமாரசாமியை கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் ஜி.சித்தராமையா தலைமையில் பல்வேறு கன்னட அமைப்பினர் அண்மையில் சந்தித்து அளித்த  மனுவில், "ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளைத் தொடங்குதல்,  28 ஆயிரம் அரசுப் பள்ளிகளை வேறொரு பள்ளிகளுடன் இணைக்கும் முடிவைக் கைவிடுதல் ஆகிய 2 திட்டங்களைக் கைவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து ஜி.சித்தராமையாகூறியது:-
நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இரு திட்டங்கள் குறித்து முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து பேசினோம். 
28 ஆயிரம் அரசுப் பள்ளிகளை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வேறொரு பள்ளியுடன் இணைப்பதாக அறிவித்துள்ளது குறித்து ஆராய்ந்து இறுதி முடிவெடுக்க வல்லுநர் குழுவை அமைக்க கேட்டிருக்கிறோம். 
இந்தக் குழுவினர் 28 ஆயிரம் அரசுப்பள்ளிகளையும் சென்று பார்வையிட்டு, ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரையின்படி அரசு நடந்துகொள்ள வேண்டும்.
கன்னடப் பயிற்றுமொழி வகுப்புகள் இருக்கும் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகளைத் தொடங்கும் முடிவையும் வன்மையாக கண்டித்துள்ளோம். இந்தத் திட்டத்தைக் கண்டிப்பாக செயல்படுத்தக்கூடாது.
இந்த இரு திட்டங்களை மறுபடியும் ஆராய்ந்த பின்னரே, அமல்படுத்துவது குறித்து முடிவெடுப்பதாக குமாரசாமி உறுதி அளித்தார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.