சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பெங்களூரை உருவாக்க திட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பெங்களூரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என ஏத்தர் மின் குழுமத்தின் துணைத் தலைவர் தருண் மெஹதா தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பெங்களூரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என ஏத்தர் மின் குழுமத்தின் துணைத் தலைவர் தருண் மெஹதா தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை அந்நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கு மின் ஏற்று மையத்தை தொடக்கி வைத்து அவர் பேசியது: தேசிய அளவில் டீசல், பெட்ரோல் உள்ளிட்டவைகளால் இயங்கும் வாகனங்கள் வெளியேற்றும் புகையினால் மாசு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, பசுமை நகரமான பெங்களூரு வாகனப் பெருக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, விரைவில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளோம். அதற்கு முன்னதாக மின்சாரத்தில் இயங்கும் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் மின்சாரத்தை ஏற்றும் (சார்ஜ்) மையத்தை முதல்கட்டமாக பெங்களூரில் தொடங்கியுள்ளோம். சோதனை முயற்சியாக பெங்களூரில் 30 இடங்களில் மின் ஏற்று மையங்களை தொடங்கியுள்ளோம். ஆண்டு இறுதிக்குள் 60 மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம். பெங்களூரைத் தொடர்ந்து சென்னை, புணே உள்ளிட்ட நகரங்களில் இது போன்ற மின் ஏற்று மையங்களை தொடங்க முடிவு செய்துள்ளோம். எங்கள் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டரை வாங்குபவர்கள் 1 ஆண்டு இலவசமாகவும், வேறு நிறுவனங்களின் மின்சார இரு சக்கரவாகனங்களுக்கு 6 மாதங்கள் இலவசமாகவும் மின்சாரத்தை நிரப்ப முடிவு செய்துள்ளோம்.
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பெங்களூரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிகளவில் இயங்கும் இருசக்கர வாகனங்களில் மின்சாரத்தை நிரப்புவதை வர்த்தகமாக கருதாமல் சேவையாக செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.