முகப்பு
பெங்களூரு

பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்க மஜதவுடன் கூட்டணி அவசியமானது

பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்கவே மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமேற்பட்டது என கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

Updated On : 22 மே, 2018 at 4:20 AM
பகிர்:

பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்கவே மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமேற்பட்டது என கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியபிறகு, அவர் பேசியது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டு மக்கள் அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சமுதாயங்களை பிளவுபடுத்தி, நாட்டு மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கர்நாடகத்தில் மதவாத சக்தியான பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் கருத்தில் கொண்டு மஜதவுடன்கூட்டணி அமைக்க முடிவுசெய்தோம். மேலும், பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்கவே மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமேற்பட்டது.
அதிகார பசியால் மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லை. மஜதவுடனான கூட்டணியில் பல சங்கடங்கள் இருந்தாலும், மக்களின் நலன்கருதி கட்சியை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்காக அதையெல்லாம் மறந்துள்ளோம். இந்த கூட்டணி நல்லாட்சி வழங்கும் என்றார் அவர்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியது: 21-ஆவது நூற்றாண்டில் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்களிப்பு அபாரமானது. நாட்டின் வளர்ச்சிக்காகவே தன் இன்னுயிரை அர்ப்பணித்தவர் அவர். தொலைத் தொடர்புத் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் ராஜீவ் காந்தி. அதேபோல, மகளிருக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் வகையிலும், கிராம மக்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் பங்காற்றும் வகையிலும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைக் கொண்டு வந்தவர். ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்த்தவர். அதுமட்டுமல்லாமல், நமக்கெல்லாம் ஊக்கம் நிறைந்தவராக திகழ்பவர்.
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினரைப் போல செயல்பட வேண்டும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார், கட்சியின் செயல் தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், எஸ்.ஆர்.பாட்டீல், முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, ஈஸ்வர் கண்ட்ரே உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.