கோலார் தங்கவயலில் எம்ஜிஆர் புகைப்பட பதாகை மீது கருப்பு மை பூச்சு: அதிமுக கண்டனம்
கோலார் தங்கவயலில் எம்ஜிஆர், அத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மு.பக்தவத்சலம் ஆகியோரது புகைப்பட பதாகைகள்
கோலார் தங்கவயலில் எம்ஜிஆர், அத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மு.பக்தவத்சலம் ஆகியோரது புகைப்பட பதாகைகள் மீது சமூக விரோதிகள் கருப்பு மை பூசியதற்கு கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்க செயலர் மு.அன்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல் நகர்மன்றம் எதிரே உள்ள எம்.ஜி.ஆரின் புகைப்பட பதாகை மற்றும் மஜதவால் வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் எம்எல்ஏ பக்தவத்சலத்தின் உருவப்படங்கள் உள்ளன. இதன்மீது சமூக விரோதிகள் கருப்பு மை பூசியுள்ளனர். இதை கண்டித்து மஜதவினர் நகர்மன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மு.பக்தவத்சலத்தின் மகன் கார்த்திக், ராபர்ட்சன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து நகர்மன்ற ஆணையர் ஸ்ரீகாந்த், ராபர்ட்சன்பேட்டை காவல் நிலைய துணை ஆய்வாளர் ஹரிஷ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். மேலும், நகர்மன்ற வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும், உருவப்படங்கள் மீது கருப்பு வர்ணம் பூசியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதுகுறித்து கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்க செயலர் மு.அன்பு வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த இத் தொகுதி எம்எல்ஏ பக்தவத்சலம் ஆகியோரது உருவப் பதாகைகள் மீது சமூக விஷமிகள் கருப்பு வர்ணத்தை பூசி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். காவல் துறையினர் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.