பெங்களூரு

ஜனநாயகக் கட்டமைப்பை பலப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியம்: தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார்

DIN

ஜனநாயகக் கட்டமைப்பை பலப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமாகும் என்று கர்நாடக மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் சார்பில் பெங்களூரில்   ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:-
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி தேர்தலில்தான் உள்ளது. இந்தத் தேர்தலை நடத்தும்போது, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமாகும். ஜனநாயகத்தின் கட்டமைப்பை பலப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  ஊடகங்கள் தங்களுக்குத் தாங்களே சுய கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, ஜனநாயகப் பணியை ஆற்ற வேண்டும். 
தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை யாரும் தொலை உணர்வி நுட்பத்தின் வாயிலாக அதன் தகவல்களை, செயல்பாடுகளை சிதைக்கவோ கையாளவோ முடியாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் துணையுடன் முறைகேடுகளில் யாரும் ஈடுபட முடியாது.
ஊடகங்களில் தேர்தல் தொடர்பான பொய்யான செய்திகள் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உண்மையான தகவல்களை மட்டுமே ஊடகங்கள் வெளியிடவேண்டும். 
தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணித்து, அமல்படுத்துவதிலும் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஊடகங்கள் வெளியிடும் விளம்பரங்களுக்கு பிரமாணப் பத்திரம் தேவைப்படுகிறது. பிரமாணப் பத்திரங்கள் இல்லாமல் விளம்பரங்களை வெளியிடக் கூடாது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஊடகங்கள் கண்காணிப்பது மட்டுமல்ல, பின்பற்றுவதும் அவசியமாகும். அப்போதுதான் ஜனநாயகத்தின் மாண்பை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் தார்மிக உரிமையை ஊடகங்கள்பெறமுடியும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்களை அறிவிக்கவும், அதற்கு நிதி ஒதுக்கவும் வாய்ப்பு இல்லை. ஆனால், வறட்சி நிவாரண நிதி ஒதுக்கவும், அத்திட்டத்தை செயல்படுத்தவும் தடையில்லை. மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வட்டங்களில் நிவாரண நிதியுதவிகளை வழங்க தடை எதுவுமில்லை. கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவது, கால்நடை பராமரிப்பு மையங்கள் தொடங்குவது, குடிநீர் வழங்குவது போன்றவை தேர்தல் நடத்தை விதிகளின் வாம்புக்குள் வரவில்லை என்றார் அவர்.
பயிலரங்கில் தேர்தல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கே.ஜி.ஜெகதீஷ், இணை அதிகாரி சூர்யசென், மின்-ஆளுமைத் துறை இயக்குநர் சுனில்பன்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT