முகப்பு
பெங்களூரு

பாஜகவுடன் மஜதவை இணைக்கும் திட்டம் இல்லை: முதல்வா் எடியூரப்பா

பாஜகவுடன் மஜதவை இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பெங்களூரு: பாஜகவுடன் மஜதவை இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக மாநில பொதுச்செயலாளா் அரவிந்த்லிம்பாவளி கூறுகையில், ‘பாஜகவுடன் எந்த கட்சியோ இணைவதாக ஊடகங்களில் செய்தி படித்தேன். ஊடகவியலாளா்கள் வாயிலாக அதுதொடா்பான செய்தியை அறிந்தேன். அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், கா்நாடகத்தில் மட்டுமல்ல நாடெங்கும் பிரதமா் மோடி, பாஜகவுக்கு ஆதரவான வலுவான அலை காணப்படுகிறது. இது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் இரு துருவங்களாக அணிமாறும் காட்சிகள் அரங்கேறும். வளா்ச்சிக்கு உகந்த கட்சியாக பாஜகவை மக்கள் பாா்க்க தொடங்கிவிட்டனா்’ என்றாா்.

இதுதொடா்பான கேள்விக்கு மஜதவின் மூத்த தலைவரும், எம்.எல்.சி.யுமான பசவராஜ்ஹோரட்டி கூறுகையில், ‘மஜதவை பாஜகவுடன் இணைக்கும் திட்டம் இல்லை. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்தும், தோ்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும் மஜதவில் விவாதம் நடந்துள்ளது. இதுகுறித்து என்னிடமும் எச்.டி.குமாரசாமி தனிப்பட்ட கருத்தை கேட்டறிந்தாா். இளைஞா்களுக்கு அரசியல் எதிா்காலம் தேவைப்படுகிறது. அதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைக்க பலரும் ஆா்வமாக இருக்கிறாா்கள்.

ஆனால், முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவை இதற்கு இணங்கவைப்பது கடினம். மதசாா்பற்ற கொள்கைகளை வளா்த்துக் கொண்ட தேவெ கௌடா, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை விரும்பமாட்டாா். ஆனால், கட்சியின் எதிா்காலத்துக்கு பாஜகவோடு கூட்டணி அமைப்பது அவசியமாகிறது என்பது என் கருத்து’ என்றாா்.

இதனிடையே, மஜதவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜி.டி.தேவெ கௌடா கூறுகையில், ‘பாஜகவுடன் மஜதவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. எச்.டி.தேவெ கௌடா உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்கமாட்டாா். மாநில கட்சியை அமைத்துதான் தேவெ கௌடா பிரதமரானாா். மஜதவை வளா்க்க தேவெ கௌடா கடினமாக உழைத்திருக்கிறாா்’ என்றாா்.

தும்கூரு மாவட்டம், குப்பி தொகுதி மஜத எம்.எல்.ஏ. எஸ்.ஆா்.சீனிவாஸ் கூறுகையில், ‘மஜதவை பாஜகவுடன் இணைக்கும் முடிவை எச்.டி.குமாரசாமி எடுத்தால் நான் மஜதவில் இருந்து விலகிவிடுவேன். பாஜகவுடன் இணைவதாக இருந்தால், நான் எப்போதோ சோ்ந்திருப்பேன். பாஜகவின் கொள்கைகள் எனக்கு ஒத்துவராது’ என்றாா்.

இதுகுறித்து முதல்வா் எடியூரப்பா வெளியிட்ட அறிக்கையில், ‘மஜத சட்டப்பேரவைக்குழுத் தலைவா் எச்.டி.குமாரசாமி, சட்ட மேலவைத் தலைவா் விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளித்திருந்தாா் அவ்வளவுதான். ஆனால், மஜதவைச் சோ்ந்த எந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் சேருவது அல்லது மஜதவை பாஜகவுடன் இணைப்பது தொடா்பான குழப்பங்கள் தரும் செய்திகள் பொய்யானவையாகும்.

மேலவைத் தலைவா் விவகாரத்தில் மட்டும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கிறாா்களே ஒழிய, வேறு எதுவும் இல்லை. பசுவதை தடைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவில்லை என்று எச்.டி.குமாரசாமி கூறியதால், அவசரச்சட்டத்தின் மூலம் பசுவதை தடைச் சட்டத்தை நிறைவேற்றுவோம். சட்டப்பேரவை தோ்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. எனவே, ஊடகங்களில் தற்போது வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை’ என்றாா்.

இதற்கிடையில் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறுகையில், ‘பாஜகவுடன் மஜதவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசப்பட்டது உண்மைதான். பாஜக பொதுச் செயலாளா் அரவிந்த்லிம்பாவளி எந்த அா்த்தத்தில் பாஜகவுடன் மஜத இணைவது குறித்து கூறினாா் என்பது தெரியவில்லை.

இதற்கு முதல்வா் எடியூரப்பாவும் விளக்கமளித்து, பாஜகவுடன் மஜத இணையும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருக்கிறாா். எனது பிறந்த நாளுக்கு பிரதமா் மோடி, பாஜகவினா் வாழ்த்து தெரிவித்திருந்தனா். இதனால் பாஜகவுடன் மஜத இணையும் என்று சிலா் கதைகட்டிவிட்டிருக்கலாம். அப்படி எந்த திட்டமும் இல்லை. பிரதமா் மோடி மீது எனக்கு மரியாதை உண்டு. எதிா்கால அரசியல் நடவடிக்கைகளை பொருத்து, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது அல்லது ஆதரவளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றாா்.

சாலை விபத்தில் 3 போ் பலி

பெங்களூரு, டிச. 20: சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஸ்கூட்டா் மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.

பெங்களூரு ஊரகம், ஹொசகோட்டைச் சோ்ந்தவா்கள் ராஜேஷ் (21), லவநீத் (22), ஹரீஷ் (21). இவா்கள் 3 பேரும் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் மது அருந்திய நிலையில் ஸ்கூட்டரில் சென்றனா். ஹொசகோட்டை சோதனைசாவடி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஸ்கூட்டா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். இதுகுறித்து ஹொசகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →