15.3.1976: கூடிய சீக்கிரம் சென்னைக்கு கிருஷ்ணா நீர் சப்ளை: ஆந்திர முதல்வர் உறுதி
சென்னைக்கு கிருஷ்ணா நீர் சப்ளை பற்றி...
சென்னை, மார்ச், 14 - அருகேயுள்ள தமிழ் நாட்டுடன் உள்ள நல்லுறவு காரணமாக பற்றாக்குறையான சென்னை நகருக்கு, கிருஷ்ணா நதி நீர் அளிக்க உடனே ஒத்துக் கொண்டதாக ஆந்திர முதலமைச்சர் வெங்கள ராவ் இன்று கூறினார்.
சென்னையிலுள்ள நமது சகோதர சகோதரிகள் தண்ணீருக்குக் கஷ்டப்படுகையில் நாம்வெறுமனே பார்த்துக் கொண்டுஇருக்க முடியாது என்றார். இன்று மாலை இங்கு சென்னபுரி ஆந்திர மகா சபா அரங்கை அவர் திறந்து வைத்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் குறிப்பாக ராஷ்டிரபதி ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ள இந்த சமயத்தில் இங்கு குடியேறியுள்ள ஆந்திர மக்கள் இந்த மாநில அபிவிருத்திக்கு தங்களால் இயன்றவரை பாடுபட வேண்டும் என்றும், தமிழ் நாட்டிலுள்ள ஆந்திர கலாசார கல்வி சங்கங்களுக்கு தமது அரசு இதுவரை ரூ. 4.5 லட்சம் வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
சென்னைக்கு தருவதாக உறுதியளித்த 500 கோடி கனஅடி கிருஷ்ணா நதி நீர் இயன்றவரை துரிதமாக சப்ளை செய்யப்படும் என்று வெங்கலராவ் உறுதி கூறினார்.
நீலகிரியில் கொத்தடிமைகளை விடுவிக்க 3 அம்ச திட்டம்: கலெக்டர் அறிவிப்பு
உதகமண்டலம், மார்ச். 14 - கூடலூர் தாலூகாவில் "பனியா" என்ற கூலிகளைப் புனரமைப்புச் செய்து அவர்களைக் கொத்தடிமையிலிருந்து விடுவிக்க இன்னும் ஒரு மாதத்துக்குள் 3 அம்சத் திட்டம் ஒன்று அமல்படுத்தப்படும்.
நீலகிரி ஜில்லா கலெக்டர் கே. இன்பசாகரன் இத்தகவலை நிருபர்களிடம் கூறினார்.
கூடலூர் தாலுகாவில் மொத் தம் 481 பனியாக்கள் இருக்கிறார்கள்.
அக்டோபர் மாதம் கொத்தடிமை முறை ஒழிப்பு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் இன்னும் பனியா கூலிகள் விடுவிக்கப்படவில்லை. கொத்தடிமை முறைக்கு உள்ளாகியிருப்பவர்கள் யார் என்பதைப் பகுத்துப் பார்ப்பதில் உள்ள கஷ்டமே இதற்குக் காரணம். மேலும் பனியாக்கள் நாகரிகம் பரவாத ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களுடைய பழங்காலப் பழக்க வழக்கங்களைக் கைவிடத் தயாராயில்லை. ஆகையால் படிப்படியாகவும் மெதுவாகவும்தான் அவர்களை விடுவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கிது என்று கலெக்டர் விளக்கினார்.
இதுவரை 207 பனியாக்கள் வேறு இடங்களில் வேலைகளை ஏற்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். தேயிலைத் தோட்டங்கள், இந்தியா - ஜெர்மனி கூட்டு திட்டங்கள், பொதுப்பணித் திட்டங்கள் போன்ற அரசாங்க ஏஜன்ஸிகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்புத் தேடித் தரப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
கூடலூர் தாலூகாவில் உள்ள பெரும் பகுதி ஜென்மிகளுக்குச் சொந்தமானது. ஆனால் 1969-ல் ஜென்மி முறை ஒழிக்கப்பட்ட பின், "செட்டிகளும்", "சேட்டான்களும்" (கோளத்தைச் சேர்ந்த சிரியன் கிறித்தவர்கள்) குத்தகைதாரர்களாகவும் நிலச் சுவான்தார்களாகவும் ஆகியிருக்கிறார்கள்.