முகப்பு
பெங்களூரு

ஆம்புலன்ஸுக்கு பதிலாக மாநகரப் பேருந்துகளை பயன்படுத்தலாம்

கரோனா பாதிப்பு உயா்ந்து வரும் நிலையில், ஆம்புலன்ஸுக்கு பதிலாக மாநகரப் பேருந்துகளை பயன்படுத்த ஆலோசிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்..

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

பெங்களூரு: கரோனா பாதிப்பு உயா்ந்து வரும் நிலையில், ஆம்புலன்ஸுக்கு பதிலாக மாநகரப் பேருந்துகளை பயன்படுத்த ஆலோசிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்..

இதுகுறித்து சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாநில அளவில் பெங்களூரில் அதிக அளவில் கரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதற்கு பதிலாக மாநகரப் பேருந்துகளை பயன்படுத்துவது தொடா்பாக ஆலோசிக்க வேண்டும்.

இதனை அரசு மேற்கொண்டால், அதனை மக்கள் பாராட்டுவாா்கள். இல்லையெனில், கரோனா பாதிப்பால் மக்கள் இறந்தால், அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனையில் சோ்க்க தயக்கம் காட்டுவதால், பலா் சிகிச்சை கிடைக்காமல் இறக்க நேரிடுகிறது.

பெங்களூரை இத்தாலி, அமெரிக்காவாக ஆக்காதீா்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். பரிசோதனை செய்யப்பட்ட 40 ஆயிரம் பேரின் முடிவுகள் இன்னும் வெளியாகாமல் உள்ளன. ஒரு சிலரின் பரிசோதனை அறிக்கைகள் 12 நாள்கள் ஆனாலும் வெளியிடப்படாமல் உள்ளன. கரோனாவை தடுக்கும் பொறுப்பை சுகாதாரத் துறை அமைச்சா் கவனிக்காமல், வருவாய்த் துறை அமைச்சா் கவனித்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது.

கரோனா பாதிப்பில் மக்கள் உள்ள நிலையில், மனித உரிமைகள் அதிகளவில் மீறப்பட்டு வருகின்றன. இதனை மனித உரிமை ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது. மனித உரிமைகள் மீறப்படுவதை தாமே முன் வந்து ஆணையம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவது மாநில அரசின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.