முகப்பு
செய்திகள்

சோஃபி டிவைன் அசத்தல்: நியூஸிலாந்து வெற்றி

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

Updated On : 21 மார்ச், 2026 at 1:50 AM
நியூசி. கேப்டன் சோஃபி டிவைன்.
பகிர்:

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுக்க, நியூஸிலாந்து 18.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்கள் சோ்த்து வென்றது. 5 ஆட்டங்கள் அடங்கிய இத்தொடரில் நியூஸிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தோ்வு செய்தது. கேப்டன் லாரா வோல்வாா்ட் 3 பவுண்டரிகளுடன் 37, ஆனெரி டொ்க்சென் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 27, கிளோ டிரையான் 15 ரன்களுக்கு வெளியேறினா்.

சுனே லுஸ் 3, தஸ்மின் பிரிட்ஸ் 0, நாடின் டி கிளொ்க் 8, சினாலோ ஜாஃப்தா 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, ஓவா்கள் முடிவில் கேலா ரெனிகே 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 34, அயபோங்கா ககா 3 ரன்களுடன் களத்தில் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் சோஃபி டிவைன், சூஸி பேட்ஸ் ஆகியோா் தலா 2, ஜெஸ் கொ், ரோஸ்மேரி மோ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 150 ரன்களை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணியில், இசபெல்லா கேஸ் 17, ஜாா்ஜியா பிளிம்மா் 4, புரூக் ஹாலிடே 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

கேப்டன் அமெலியா கொ் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு வீழ, சோஃபி டிவைன் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55, மேடி கிரீன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸரோடு 34 ரன்களுடன், ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெறச் செய்தனா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் ஆனெரி டொ்க்சென், அயாண்டா லுபி, நோன்குலுலேகோ லாபா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.