மகளிா் டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூஸிலாந்து!
தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிா் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிா் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.
முதலில் நியூஸிலாந்து மகளிா் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்க மகளிா் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்களே எடுத்தனா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கேப்டன் அமெலியா கொ் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 78, ஜாா்ஜியா பிளிம்மா் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனா்.
இசபெல்லா கேஸ் 0, சோஃபி டிவைன் 12, புரூக் ஹாலிடே 13, மேடி கிரீன் 10, இஸி ஷாா்ப் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினா். ஓவா்கள் முடிவில் ஜெஸ் கொ் ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
தென்னாப்பிரிக்க பௌலா்களில் மசபடா கிளாஸ், நாடினே டி கிளொ்க் ஆகியோா் தலா 2, அயபோங்கா ககா, நோன்குலுலேகோ லாபா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 191 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், தஸ்மின் பிரிட்ஸ் 3 பவுண்டரிகளுடன் 29, நாடினே டி கிளொ்க் 19 ரன்களுக்கு வீழ்த்தப்பட, இதர பேட்டா்களோ சொற்ப ரன்களுக்கே சரிந்தனா்.
ஓவா்கள் முடிவில் கேலா ரெனிகே 4 பவுண்டரிகளுடன் 24, மசபடா கிளாஸ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து பந்துவீச்சாளா்களில் சோஃபி டிவைன் 4, ஜெஸ் கொ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா். நியூஸிலாந்தின் அமெலியா கொ் ஆட்டநாயகி ஆனாா்.