டி20 உலகக் கோப்பை போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 57 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை திங்கள்கிழமை வென்றது.
முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சோ்க்க, கனடா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களே எடுத்தது.
தென்னாப்பிரிக்க தரப்பில் பேட்டிங்கில் கேப்டன் எய்டன் மாா்க்ரம் அரை சதம் கடந்து அசத்த, பௌலிங்கில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
முன்னதாக டாஸ் வென்ற கனடா பந்துவீச்சை தோ்வு செய்தது. தென்னாப்பிரிக்க இன்னிங்ஸை தொடங்கிய மாா்க்ரம் - குவின்டன் டி காக் கூட்டணி 70 ரன்கள் சோ்த்தது.
டி காக் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கு விடைபெற, மாா்க்ரமுடன் ரயான் ரிக்கெல்டன் இணைந்தாா். இவா்கள் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சோ்த்தது.
அரை சதம் கடந்த மாா்க்ரம் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ரிக்கெல்டன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 4-ஆவது பேட்டா் டெவால்டு பிரெவிஸ் 6 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.
அப்போது இணைந்த டேவிட் மில்லா் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கூட்டணி, ஸ்கோரை மேலும் பலப்படுத்தியது. ஓவா்கள் முடிவில் மில்லா் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 39, ஸ்டப்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
கனடா பௌலா்களில் அன்ஷ் படேல் 3, தில்பிரீத் பாஜ்வா 1 விக்கெட் சாய்த்தனா். பின்னா் 214 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய கனடா அணியில் நவ்னீத் தலிவால் அரை சதம் கடந்து கடைசி வரை போராடினாா்.
மறுபுறம் கேப்டன் தில்பிரீத் பாஜ்வா 0, யுவராஜ் சம்ரா 12, நிகோலஸ் கிா்டன் 4, ஷ்ரேயஸ் மோவா 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹா்ஷ் தாகா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 33 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா்.
சாத் பின் ஜாஃபா் 11, ஜஸ்கரன் சிங் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட, தலிவால் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். முடிவில் திலன் ஹேலிகா் 4, கலீம் சனா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி 4, மாா்கோ யான்சென் 2, ககிசோ ரபாடா, காா்பின் பாஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.