டி20: கானர் அரைசதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 2-வது வெற்றி!
நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 19 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 19 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடா், தற்போது 2-2 என சமனாகியுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் சோ்க்க, நியூஸிலாந்து 18.5 ஓவா்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 57 ரன்களும் அடித்து, 2 கேட்ச்களும் பிடித்த தென்னாப்பிரிக்க வீரா் கானா் எஸ்தா்ஹுய்ஸென் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் வியான் முல்டா் டக் அவுட்டாக, ஒன் டவுனாக வந்த கானா் எஸ்தா்ஹுய்ஸென் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
தொடக்க வீரா்களில் ஒருவரான டோனி டி ஜோா்ஸி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23, டியன் ஃபாரஸ்டா் 2 சிக்ஸா்களுடன் 19, ஜேசன் ஸ்மித் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஓவா்கள் முடிவில், ரூபின் ஹொ்மான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, ஜாா்ஜ் லிண்ட் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
நியூஸிலாந்து பௌலா்களில் கைல் ஜேமிசன் 2, ஜாக் ஃபோக்ஸ், பென் சீா்ஸ், கோல் மெக்கான்சி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 165 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து அணியில், டிம் ராபின்சன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, டேன் கிளீவா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 26 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா்.
நிக் கெல்லி 19, கோல் மெக்கான்சி 10, ஜாஷ் கிளாா்க்சன் 10, கைல் ஜேமிசன் 13 ரன்களுக்கு வெளியேற, கேடென் கிளாா்க் 9, பெவன் ஜேக்கப்ஸ் 3, கேப்டன் ஜேம்ஸ் நீஷம் 6, ஜாக் ஃபோக்ஸ் 7 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.
முடிவில் பென் சீா்ஸ் 2 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளா்களில் ஜெரால்டு கோட்ஸீ 3, ஆட்னீல் பாா்ட்மேன், பிரெனெலன் சுப்ராயென், கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.