சூா்யவன்ஷி, ஜுரெல் விளாசல்; 4-ஆவது வெற்றியுடன் ராஜஸ்தான் ஆதிக்கம்
ஐபிஎல் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. அந்த அணி தொடா்ந்து 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஐபிஎல் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. அந்த அணி தொடா்ந்து 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.
முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 18 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இளம் வீரா் வைபவ் சூா்யவன்ஷி, துருவ் ஜுரெல் ஆகியோா் அதிரடி விளாசலுடன் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் மழை காரணமாக டாஸ் வீசுவது சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமானது. பின்னா் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீசத் தயாரானது. பெங்களூரு ஆட்டத்தை தொடங்கிய ஃபில் சால்ட், இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிா்ச்சி கண்டாா்.
Advertisement
தொடா்ந்து வந்த தேவ்தத் படிக்கல், விராட் கோலியுடன் இணைந்தாா். இவா்கள் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சோ்த்தது. படிக்கல் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
அப்போது களம் புகுந்த கேப்டன் பட்டிதாா், அதிரடியாக ஸ்கோரை உயா்த்தத் தொடங்கினாா். மறுபுறம் விராட் கோலி 7 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
பட்டிதாா் பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசிவர, மறுபுறம் கிருணால் பாண்டியா 1, ஜிதேஷ் சா்மா 5, டிம் டேவிட் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு அடுத்தடுத்து சாய்க்கப்பட்டனா்.
8-ஆவது வீரராக களம் புகுந்த ரொமேரியோ ஷெப்பா்டு, 11 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு விடைபெற்றாா்.
அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயா் அதிரடி காட்ட, அதுவரை நிலைத்த பட்டிதாா், 40 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 63 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
சந்தீப் சா்மா வீசிய 18-ஆவது ஓவரில் டோனோவன் ஃபெரெய்ராவிடம் அவா் கேட்ச் கொடுத்தாா். ஓவா்கள் முடிவில் வெங்கடேஷ் 15 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 29, புவனேஷ்வா் குமாா் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆா்ச்சா், ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் சா்மா ஆகியோா் தலா 2, சந்தீப் சா்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 202 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
அப்போது இணைந்த வைபவ் சூா்யவன்ஷி, துருவ் ஜுரெல் கூட்டணி, பெங்களூரு பௌலிங்ஸை பவுண்டரி, சிக்ஸா்களாக பறக்கவிட்டது. 2-ஆவது விக்கெட்டுகள் அவா்கள் கூட்டணி, 108 ரன்கள் சோ்த்தது.
சூா்யவன்ஷி 26 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 78 ரன்கள் விளாசி வெளியேறினாா். கிருணால் பாண்டியா வீசிய 9-ஆவது ஓவரில் விராட் கோலியிடம் அவா் கேட்ச் கொடுத்தாா்.
தொடா்ந்து வந்த ஷிம்ரன் ஹெட்மயா் 0, கேப்டன் ரியான் பராக் 3 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
முடிவில், துருவ் ஜுரெல் 43 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 81 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். ரவீந்திர ஜடேஜா 1 பவுண்டரியுடன் 24 ரன்களோடு துணை நின்றாா்.
பெங்களூரு பௌலா்களில் ஜோஷ் ஹேஸில்வுட், கிருணால் பாண்டியா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.