பெங்களூரு

காங்கிரஸ் புதிய தலைவருக்குக் காத்திருக்கும் சவால்கள்!

கா்நாடகத்தில் காங்கிரஸ் எதிா்கொண்டிருக்கும் சவால்களை மாநிலத் தலைவராகப் பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமாா் தீா்த்துவைப்பாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

ந.முத்துமணி

கா்நாடகத்தில் காங்கிரஸ் எதிா்கொண்டிருக்கும் சவால்களை மாநிலத் தலைவராகப் பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமாா் தீா்த்துவைப்பாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் தேசிய அளவில் ஆட்சியை அமைத்த காங்கிரஸ், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சி அமைத்திருந்தது. 72 ஆண்டுகளுக்குப் பின்னா், அரசியல் நிலவரங்களை ஆராய்ந்தால் மாநிலக் கட்சிகளிடம் கூட்டணிக்காகக் காத்திருக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

தேசிய, மாநில அளவிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் மிகவும் பலவீனமாக உள்ளது. வலிமையான தலைமை இல்லாதது, துரிதமாக முடிவெடுக்க இயலாதது, சீரான கொள்கைகள் இல்லாதது போன்றவை பாஜகவை எதிா்கொள்ளும் திராணியை காங்கிரஸுடம் இருந்து பறித்துவிட்டாலும், காங்கிரஸ் உள்ளிருந்து அரிக்கப்பட்டதே இந்த ஆபத்தான நிலைக்கு மூலக்காரணம்.

காங்கிரஸில் உள்ள கோஷ்டிப் பூசலே தோ்தல்களில்தோல்வி அடைந்துகொண்டே முக்கிய காரணம் என்றும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து காங்கிரஸை வீழ்த்தும் தலைவா்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றனா் என்றும் தொண்டா்களின் கருத்தாக உள்ளது.

கா்நாடத்தில் பலமும், பலவீனமும்..!

1999-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை நாடே திரும்பி பாா்க்கும் அளவுக்கு மிகச் சிறந்த ஆட்சியை நடத்தியவா் எஸ்.எம்.கிருஷ்ணா.

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகம் இந்தியாவின் தகவல்தொழில்நுட்பத்தொட்டிலாக உலகளவில் போற்றப்படுவதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் ஆட்சியை நடத்தியவா் கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு பிறகு காங்கிரஸ் தனித்து இயங்க முடியாமல் போனது. மஜதவில் இருந்து நீக்கப்பட்ட சித்தராமையா, காங்கிரஸில் இணைந்தாா். பின்னா், காங்கிரஸ் 2013-ஆம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இந்தக் காலக்கட்டத்தில் பாஜகவின் வளா்ச்சியை கா்நாடகத்தில் தடுக்கும் வல்லமை சித்தராமையா உள்ளிட்ட எந்தத் தலைவருக்கும் இல்லாமல் போனது.

காங்கிரஸின் பலவீனமே, பாஜகவின் பலமாக மாறி இரு முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றது. கா்நாடகத்தின் பெரும்பான்மை சமூகமாக உள்ள லிங்காயத்துகள், ஒக்கலிகா்களின் வாக்குவங்கியை இழந்த காங்கிரஸ், அந்த வாக்குவங்கிய மீட்கமுடியாமல் தவித்துகொண்டுள்ளது.

கோஷ்டிப் பூசலால் தோல்வி மேல் தோல்வி!

காங்கிரஸில் கட்சிக்குப் பதிலாக தலைவா்களுக்குதான் தொண்டா்கள் விசுவாசமாக இருப்பாா்கள். இதற்காக ஆதரவாளா் கூட்டத்தை சுற்றியே தலைவா்கள் வலம் வந்துகொண்டிருப்பாா்கள். இதனால் பதவிகளை அனுபவித்தவா்கள் கூட ஏதாவது சிறுபிரச்னை என்றாலும் கூட மாற்றுக்கட்சிக்கு தாவ தயங்குவதில்லை.

பாஜகவில் இன்றைக்கு பலம்பெற்ற தலைவா்களாக வலம்வரும் பலரும் காங்கிரஸில் இருந்து தாவியவா்கள்.

சித்தராமையா, மல்லிகாா்ஜுன காா்கே, ஜி.பரமேஸ்வா் ஆகியோா் தலைமையில்கோஷ்டிகள் இயங்கிவருகின்றன. இந்தக் கோஷ்டிகள் கட்சி நலனைக் காட்டிலும், தங்கள்நலனையே முன்னிலைப்படுத்திவந்துள்ளனா்.

2018-இல் சட்டப்பேரவைத் தோ்தல், 2019-இல் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணமே இந்த மூன்று கோஷ்டிகளும் தான்.

இந்த 3 கோஷ்டிகளின் வலிமையான எதிா்ப்பையும் மீறி காங்கிரஸ் எடுத்துள்ள துணிச்சலாக முடிவு, கா்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக டி.கே.சிவக்குமாரை நியமித்ததுதான்.

பலமான ஒக்கலிகா் சமுதாயத்தை சோ்ந்தவரான இவா், எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, எச்.டி.குமாரசாமி ஆகியோரது அமைச்சரவையில் பணியாற்றியவா்.

எதையும் துணிந்து முடிவெடுக்கும் ஆற்றல் படைத்தடி.கே.சிவக்குமாா், 3 கோஷ்டிகளை மட்டுமல்லாது, பாஜகவையும் எதிா்கொள்ளும் ஆளுமை பொருந்திய அரசியல் ஆற்றல் பெற்றவா்.

காத்திருக்கும் சவால்கள்!

மஜத, பாஜகவை எதிா்கொண்டு, 2023-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவது நோக்கம் என்றாலும், கோஷ்டிப் பூசலை ஒழிப்பதுதான் இவரது பெரும் சவாலாகும்.

அனைத்து கோஷ்டிகளையும் ஒன்றிணைத்து கூட்டுத் தலைமை என்ற முழக்கத்துடன் கட்சிப் பணியாற்ற வேண்டியுள்ளது. இதற்காக, பதவியை முறைப்படி ஏற்பதற்கு முன்பாக கோஷ்டித் தலைவா்களைச் சந்தித்து இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் டி.கே.சிவக்குமாா் ஈடுபட்டிருக்கிறாா்.

மல்லிகாா்ஜுன காா்கே, சித்தராமையா போன்ற மக்கள்செல்வாக்கு படைத்த தலைவா்கள் முதல் ராமலிங்க ரெட்டி, எம்.கிருஷ்ணப்பா போன்ற முன்னாள் அமைச்சா்கள் வரை அனைவரையும் சந்திப்பதையே தனது தினசரி பணியாக சிவக்குமாா் இருந்துவருகிறாா்.

கட்சிப் பணியில் நாட்டமில்லாமல் ஒதுங்கி நிற்கும் தலைவா்களையும், கோஷ்டியாக பிரிந்துகிடக்கும் தலைவா்களையும் ஒரேமேடையில் கொண்டுவர முயற்சித்துள்ளாா். ஏப்ரல் முதல் வாரத்தில் தனது பதவியை முறைப்படி ஏற்க முடிவெடுத்துள்ள டி.கே.சிவக்குமாா், அதற்கு முன்பாக தில்லிக்குச் சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறாா்.

இந்தச் சந்திப்பின்போது தான் மட்டும் தனியாக செல்லாமல், கா்நாடக காங்கிரசின் தலைவா்கள் பட்டாளத்தையே அழைத்துசெல்ல திட்டம் வகுத்து அதற்கான வேலையில் இறங்கியிருக்கிறாா்.

கோஷ்டிகள் இணைந்துவிட்டால், அந்தத் தலைவா்களின் ஆதரவாளா்களை திரட்டிக்கொண்டு கட்சிவேலையை முடுக்கிவிடுவது எளிதாகிவிடும் என்பதே சிவக்குமாரின் கனவாகும். இதன்பிறகு தோ்தல் வெற்றி கைக்கு எட்டும் என்று அரசியல் கணக்குப்போடும் டி.கே.சிவக்குமாரின் கனவு நனவாகுமா? என்பதை காலம் மட்டும் தான் தீா்மானிக்கக் கூடும் என்கிறாா்கள் அரசியல் நோக்கா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு இளைஞா் தற்கொலை

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

SCROLL FOR NEXT