முகப்பு
உலகம்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

உலகில் தற்போது உயிர்வாழும் மிகவும் வயதான கொரில்லாவாக நம்பப்படும் ‘ஃபதூ’ தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 7:22 PM
69-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ‘ஃபதூ’ கொரில்லா - AP
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 7:00 PM

ஜெர்மனியின் மிருகக்காட்சி சாலையில் உள்ள உலகின் மிக வயதான கொரில்லா தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடியது.

மேற்கு ஆப்ரிக்க பகுதியைச் சேர்ந்த ‘ஃபதூ’ என்ற பெயர் கொண்ட பெண் கொரில்லா கடந்த 1959 ஆம் ஆண்டு ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. கொரில்லா அங்கு வந்தபோது அதற்கு 2 வயது இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கொரில்லாவின் உண்மையான பிறந்த தேதி தெரியாத நிலையில் ஏப்ரல் 13 அதன் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

Advertisement

பொதுவாக கொரில்லா குரங்குகள் காடுகளில் 35 முதல் 40 ஆண்டுகள் உயிர்வாழும். வளரும் சூழ்நிலையைப் பொறுத்து அது மாறுபடும்.

பெர்லின் மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளில் 1955 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த ’இங்கோ’ என்ற 75 வயதான ஃபிளமிங்கோ பறவை இறந்த பின்னர், அதற்கு அடுத்த மூத்த விலங்காக ‘ஃபதூ’ கொரில்லா இருந்து வருகிறது.

ஃபதூ என்கிற 69 வயதான கொரில்லா - Markus Schreiber

மேற்கு ஆப்ரிக்காவின் காட்டில் ஃபதூ பிறந்ததாக நம்பப்படுகிறது. ஃபதூவை பிரெஞ்சு மாலுமி ஒருவர் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வந்து, பிரான்சின் மார்சே நகரில் உள்ள மதுபானக் கடையில் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் அதை பண்டமாற்று செய்ததாக கின்னஸ் உலக சாதனை புத்தகம் குறிப்பிடுகின்றது. அதன் பின்னர் ஒரு பிரெஞ்சு விலங்கு வியாபாரி ஃபதூவை மிருகக்காட்சிசாலைக்கு விற்றுள்ளார்.

வயதானதால், ஃபதூ தனக்கென இருக்கும் வசிப்பிடத்தில் மட்டுமே பெரும்பாலும் இருக்கின்றது. மேலும், முதுமைக் காலத்தில் மற்ற கொரில்லாக்களிடமிருந்து விலகியிருக்கவும் விரும்புகின்றது. பற்களை இழந்த ஃபதூ, லேசான மூட்டுவலி மற்றும் காது கேளாமை நோயினால் அவதிப்படுகிறது. சற்று பிடிவாத குணமுடன் இருந்தாலும் அங்குள்ள பணியாளர்களுடன் ஃபதூ மிகவும் நட்புடன் நட்புடன் நடந்துகொள்வதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

69 வயதான ஃபதூ உலகில் தற்போது உயிர்வாழும் மிகவும் வயதான கொரில்லாவாக நம்பப்படுகிறது.

summary

Happy 69th birthday to Fatou, the world’s oldest gorilla

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.