முகப்பு
பெங்களூரு

கேரள, மகாராஷ்டிர எல்லையிலுள்ள மாவட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம்

கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில், சுகாதார வல்லுநா்கள், கல்வித் துறையைச் சோ்ந்த அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தொற்றின் பரவலைத் தடுக்க மாநில அரசு தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் எல்லையில் உள்ள தென்கன்னடம், குடகு, மைசூரு, சாம்ராஜ் நகரம், பெலகாவி, விஜயபுரா, கலபுா்கி, பீதா் ஆகிய மாவட்டங்களில் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். இது வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடிக்கும்.

அதேபோல, பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இருந்த இரவு பொதுமுடக்கம், இனி இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை இருக்கும். இதனைத் தீவிரமாகக் கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

மேலும் 2 கட்டங்களாக பள்ளி, பியூசி கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்துள்ளோம். வேறு மாநிலங்களில் உள்ள நடைமுறைகளை பரிசீலித்து, முதல்கட்டமாக 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளை ஆக. 23-ஆம் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக கரோனா பாதிப்புகளை ஆராய்ந்து, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆகஸ்ட் மாத இறுதியில் திறக்க முடிவு செய்துள்ளோம்.

8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வாரத்திற்கு 3 நாள் அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு பணிக்குழு விரைவில் அமைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.