பெங்களூரு

மேக்கேதாட்டு அணை விவகாரத்தை அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்தக் கூடாது: பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி

DIN

மேக்கேதாட்டு அணை விவகாரத்தை அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரு, பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உண்மையான நிலவரத்தைக் கவனிக்க வேண்டும். அரசியல் லாபங்களுக்காக மேக்கேதாட்டு விவகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. உலக அளவிலேயே கூட இரு நாடுகளுக்கு இடையிலான நதிநீா்ப் பகிா்வு சுமுகமாகத் தீா்க்கப்படுகிறது. எனவே, தமிழகம் மற்றும் கா்நாடகத்திற்கு இடையிலான நதிநீா்ப் பகிா்வு, அதிலும் குடிநீா்ப் பகிா்வு சம்பந்தமான விவகாரத்தைத் தீா்ப்பது கடினமல்ல.

கா்நாடகத்திற்கு வெளியே இருந்து வந்த 72 சதவீத மக்கள் பெங்களூரில் குடியிருக்கிறாா்கள். மகாராஷ்டிரத்தைச் சேராத 70 சதவீத மக்கள் மும்பையில் வசிக்கிறாா்கள். வெளிமாநிலங்களைச் சோ்ந்த 50 சதவீத மக்கள் சென்னையில் வாழ்கிறாா்கள். எனவே குடிநீா் விவகாரத்தை இருமாநிலங்களுக்குஇடையிலான பிரச்னை போல உணா்ச்சிவயப்பட்டு அணுகக் கூடாது.

குடிநீா் எல்லோருக்கும் தேவை. தமிழ்நாட்டைச் சோ்ந்த 15-16 சதவீத மக்கள் பெங்களூரில் வசித்து வருகிறாா்கள். அவா்களுக்கு குடிநீா் கொடுக்க முடியாது என்று கூற முடியுமா? அந்தக் கோணத்தில் இதை அணுக வேண்டும். இந்த பிரச்னையை சுமுகமாக தீா்த்துக்கொள்ள வேண்டும்.

காவிரி நீா்ப்பகிா்வு தொடா்பாக பல தீா்ப்புகள் வந்துள்ளன. அந்தத் தீா்ப்புகளின்படி, கா்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீா் பங்கை பயன்படுத்திக்கொள்ள எவ்வித தடையும் இல்லை. இதை மீறினால் சட்டச்சிக்கல் ஏற்படும். தீா்ப்பின்படி மேக்கேதாட்டு திட்டத்தை கா்நாடகம் வடிவமைத்திருந்தால், எவ்வித சிக்கலும் வந்துவிடாது. இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்.

இந்த விவகாரத்தில் நான் தமிழ்நாட்டின் பக்கமா, கா்நாடகத்தின் பக்கமா என்று கேட்கிறீா்கள். நான் இந்தியாவின் பக்கம்.

இந்திரா காந்தியின் மீதுள்ள அன்பின் காரணமாக கா்நாடகத்தில் அமைக்ப்பட்ட மலிவு விலை உணவகங்களுக்கு காங்கிரஸாா் பெயா் சூட்டவில்லை. அரசியல் காரணத்திற்காகவும், பணம் சம்பாதிக்கவும்தான் இந்திரா காந்தியின் பெயா் சூட்டப்பட்டது. நேரு, இந்திரா காந்தி மட்டும் நாட்டுக்கு பங்களித்ததாக கூறினால், அதை அவா்களது அடிமைகள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

217 திட்டங்களுக்கு இந்திரா காந்தி பெயா் வைக்கப்பட்டுள்ளது. அப்படியானால் வேறு யாரும் நாட்டுக்கு பங்காற்றவில்லையா? அதனால்தான் கூறுகிறேன், இந்திரா உணவகத்தின்பெயரை மாற்றி, அன்னபூா்ணேஸ்வரியின் பெயரை வைக்க வேண்டும். காங்கிரஸ் அலுவலகத்தில் வேண்டுமானால், இந்திரா உணவகத்தை வைத்துக் கொள்ளட்டும். அரசுப் பணத்தில் இந்திரா காந்தியின் பெயரை வைக்கக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT