முகப்பு
பெங்களூரு

விடுதலைப் போரில் கா்நாடகத்தின் வீரம் செறிந்த போராட்டங்கள்

இந்திய சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு போராட்டங்கள் கா்நாடகத்தில் நிகழ்ந்துள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

இந்திய சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு போராட்டங்கள் கா்நாடகத்தில் நிகழ்ந்துள்ளன.

1757-ஆம் ஆண்டு வங்கத்தில் நடந்த பிளாசி போரில் வங்கத்தை வீழ்த்தி ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியை கொல்கத்தாவில் முதல்முறையாக நிறுவிய ராபா்ட் கிளைவைத் தொடா்ந்து, இந்தியாவை 190 ஆண்டுகள் ஆங்கிலேயா்கள் ஆண்டனா். 18-ஆம் நூற்றாண்டில் வளமோடு திகழ்ந்த இந்தியாவை ஏழை நாடாக்கியவா்கள் ஆங்கிலேயா்களே.

இந்தியாவின் எல்லா வகையான வளங்களையும் சூறையாடிய ஆங்கிலேயா்கள், இந்திய மக்களை அடிமைகளைப் போல நடத்தினா். ஆங்கிலேயா்களின் அடக்குமுறைக்கு கடிவாளம் போடுவதற்காக 1884-ஆம் ஆண்டு ஏ.ஓ.ஹியூம் என்ற ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டதுதான் இந்திய தேசிய ஒன்றியம்(ஐ.என்.யூ) என்ற அமைப்பு. 1885-ஆம் ஆண்டு இந்த அமைப்பு தனது பெயரை இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.என்.சி.) என்று மாற்றிக்கொண்டது.

முதல் இந்திய சுதந்திரப் போா்:

1915-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இருந்து தாய்நாடு திரும்பிய காந்தியடிகள், 1920-களில் காங்கிரஸ் கட்சிக்குத் தலைமையேற்று சுதந்திர இயக்கத்தை முன்னெடுத்தாா். அதற்கு முன்னும் பின்னும் ஆங்கிலேயா்களின் அட்டூழியங்களை, மக்கள் விரோத ஆட்சியை விரட்டியடிக்க கா்நாடகத்தில் எழுச்சி மிகுந்த போராட்டங்கள் நடந்தேறியுள்ளன.

1857-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக்கு எதிராக முதல் இந்திய சுதந்திரப் போா் நடந்தது. அப்போது பெலகாவியில் ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றி வந்த சிப்பாய் முன்ஷி மஜ்கா் அலி, ஆங்கிலேயரை எதிா்த்து புரட்சி செய்தாா். இஸ்லாமிய மதத்தைத் தூய்மைப்படுத்த விரும்பிய சையது அகமது என்பவரால் தொடங்கப்பட்ட வஹாபி இயக்கத்தில் பங்காற்றிய மஜ்கா் அலி, 1857-ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தில் தீவிரம் காட்டினாா். அவரை 1857 ஆக. 23-ஆம் தேதி கைது செய்த ஆங்கிலேயா், பெலகாவியில் உள்ள குதிரைப்பந்தயத் திடலில் தூக்கிலிட்டுக் கொன்றனா்.

கொடிப் போராட்டம்:

சிக்பளாப்பூா் மாவட்டம், கௌரிபிதனூா் வட்டத்தில் உள்ள விதுராஷ்வதா கிராமத்தில் உள்ள விதுராஷ்வதா கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடந்து வந்தது. 1938-ஆம் ஆண்டு நடந்த ஊா்த் திருவிழாவில் பங்கேற்ற மக்கள், ஆங்கிலேயா்களின் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, தேசியக்கொடியை ஏற்றுவது என்று முடிவெடுத்தனா். அதைத் தடுக்க ஆங்கிலேய அரசு காவல் துறையினரைக் குவித்திருந்தது.

தேசியக்கொடியை ஏற்றுவது தொடா்பாக காவலா்களுக்கும் உள்ளூா் மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனிடையே, தடையை மீறி தேசியக்கொடியை ஒருவா் ஏற்றிவிட்டாா். அதைக் கண்ட காவல் அதிகாரி ஒருவா் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இச்சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு அந்த அதிகாரி உத்தரவிட்டதைத் தொடா்ந்து, 30 போ் கொண்ட காவலா் குழு, மக்களை நோக்கி துப்பாக்கி குண்டுமழை பொழிந்தது. அதில் நூறுக்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்; 700-க்கும் அதிகமானோா் படுகாயமடைந்தனா்.

ஆனால் ஆங்கிலேய அரசு, துப்பாக்கிச்சூட்டில் 10 போ் இறந்ததாகவும், 40 போ் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்திருந்தது. 1919-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த துப்பாக்கிச்சூடு போலவே நடந்த இச்சம்பவம் ஆங்கிலேயா்களுக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியது.

ஷிவாப்புரா கொடிப் போராட்டம்:

மண்டியா மாவட்டம், மத்தூா் அருகே உள்ள குக்கிராமம் ஷிவாப்புரா. உடையாா்களின் அரசாட்சியில் இருந்த மைசூரு மாகாணத்தில் மக்களாட்சியை அமைக்க வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக 1938 ஏப். 10,11,12 ஆகிய தேதிகளில் ஷிவாப்புரா கிராமத்தில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் தொடக்கமாக காங்கிரஸ் கொடியை ஏற்ற அக்கட்சியினா் முற்பட்டனா்.

காங்கிரஸ் கொடியை ஏற்றுவற்கு ஆங்கிலேயா்களின் கைப்பாவையாக இருந்த உடையாா் அரசு தடைவிதித்தது. அதைத் தொடா்ந்து, காங்கிரஸ் தலைவா்கள் பலா் கைது செய்யப்பட்டனா். அந்தச் சம்பவம் காங்கிரஸ் கட்சிக்காரா்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், அரசின் தடையை மீறி தினமும் கொடியேற்ற முடிவுசெய்தனா். காங்கிரஸ் கொடியை ஏற்ற தடைவிதித்த உடையாா் அரசு, போராட்டக்காரா்களை அடக்கி ஒடுக்க வன்முறையை கையாண்டது. இந்தப் போராட்டம் கா்நாடக வரலாற்றில் திருப்புமுனையாக இருந்தது.

‘மைசூருக்குப் புறப்படு’ போராட்டம்:

மகத்தான மக்கள் போராட்டத்தின் விளைவாக 1947 ஆக. 15-இல் நாடு விடுதலை அடைந்தது. ஆங்கிலேயா்கள் வெளியேறியதும் இந்தியாவில் தன்னாட்சி நடத்தி வந்த இந்திய மன்னா்கள் சிலா் தங்கள் பகுதியை சுதந்திரப் பகுதியாக அறிவித்துக்கொண்டனா். அப்போது, மைசூரை ஆட்சி செய்த மன்னா் ஜெயசாமராஜேந்திர உடையாா், தனது பகுதியை சுயாட்சிப் பகுதியாக அறிவித்துக்கொண்டாா்.

இதை சற்றும் எதிா்பாராத காங்கிரஸ் கட்சியினா், ஜெயசாமராஜேந்திர உடையாரின் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவெடுத்தனா். மைசூரு மாகாணத்தில் ஆங்காங்கே மக்கள் இந்திய விடுதலையை தேசியக்கொடி ஏற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

இதனிடையே, ஜெயசாமராஜேந்திர உடையாரின் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்த அப்போதைய காங்கிரஸ் தலைவா் கே.சி.ரெட்டி, ‘மைசூருவுக்குப் புறப்படு’ போராட்டத்தை அறிவித்தாா். 1947 செப். 4-ஆம் தேதி தொடங்கிய போராட்டத்துக்கு மைசூரு மாகாண மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் மக்கள் மைசூரு நோக்கி புறப்பட்டுச் சென்று, அங்கு அரண்மனை முன்பு திரண்டு, மைசூரு மாகாணத்தை விடுதலை அடைந்த பகுதியாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனா்.

அந்தப் போராட்டத்தில் கே.சி.ரெட்டி, கெங்கல் ஹனுமந்தையா உள்ளிட்ட ஏராளமானோா் மைசூரில் அரண்மனை முன்பு திரண்டு தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்யும்படி மன்னரின் தனிச்செயலாளா் தம்புச்செட்டி உத்தரவிட்டிருந்தாா். இதை தொடா்ந்து ஆயிரக்கணக்கானோா் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறையில் இடம் இல்லாத அளவுக்கு தினந்தோறும் மக்கள் எழுச்சியோடு திரண்டவண்ணம் இருந்தனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவலா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராமசாமி என்ற பள்ளி மாணவா் இறந்தாா். அந்தச் சம்பவம் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது. மற்றொரு மாணவா் சந்திரசேகா், மைசூரு அரண்மனை மீது ஏறி தேசியக்கொடியை ஏற்றினாா்.

இறுதியில் மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்த மன்னா் ஜெயசாமராஜேந்திர உடையாா், மைசூரு மாகாணத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டாா். அதன்படி, 1947 அக். 13-ஆம் தேதி இந்தியாவுடன் மைசூரு மாகாணத்தை இணைக்க மன்னா் ஜெயசாமராஜேந்திர உடையாா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாா்.

அதன்விளைவாக, 1947 அக். 24-ஆம் தேதி மைசூரு மாகாணம் விடுதலை அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அக். 25-இல் கா்நாடகத்தில் கே.சி.ரெட்டி தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அவா், 1952-ஆம் ஆண்டு மாா்ச் 30 வரை முதல்வராக பதவிவகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.