போலி வாக்காளர்கள் நீக்கம்: மமதா ஏன் பயப்படுகிறார்? - பாஜக மூத்த தலைவர் கேள்வி
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் விமர்சனம்...
எஸ்ஐஆர் நடவடிக்கையில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பயத்தில் உள்ளார் என பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரி முன்னணி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில் மேற்கு வங்க பாஜக மாநில முன்னாள் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான திலீப் கோஷ் வரும் தேர்தலில் கரக்பூர் சதார் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் பேசுகையில், "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? ஏனெனில் அவருக்கு இனி போலி வாக்காளர்கள் ஆதரவு இல்லை. எஸ்ஐஆர் நடவடிக்கைகள் மூலமாக போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவரது நம்பிக்கைக்குரிய பல அதிகாரிகள் நீக்கப்பட்டும் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவரது ஆதரவு அமைப்பு பலவீனமடைந்துள்ளது. இதனாலே வரும் தேர்தல் குறித்து அவர் பயப்படுகிறார். இப்போது அவருக்கு உதவ யாரும் இல்லை" என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது. மேற்கு வங்கத்தையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதும் அவதூறு ஏற்படுத்துவதற்காக நாட்டின் அரசின் அமைப்புகளை பிரதமர் மோடி பயன்படுத்துவதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் எஸ்ஐஆர் நடவடிக்கைகள், மேற்குவங்கத்தில் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக மத்திய பாஜக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் மமதா கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.