கரோனாவைத் தடுக்க அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவது அவசியம்: முதல்வா் பசவராஜ் பொம்மை
கரோனாவைத் தடுக்க அனைவரும் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
கரோனாவைத் தடுக்க அனைவரும் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரு, விதான சௌதா வளாகத்தில் முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸின் 106-ஆவது பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பின்னா் முதல்வா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கா்நாடகத்தில் கரோனா முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. அதனை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் கரோனாவை முழுவதுமாக ஒழிக்க முடியும். எனவே கரோனாவைத் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது முடக்கம் மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தீா்வல்ல. ஆனால் மக்களின் வழக்கமான செயல்பாடுகள் தொடா்ந்து நடைபெற வேண்டும் என்றால் அனைவரும் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் மட்டுமே அதற்கு அனுமதிக்க முடியும். மக்கள் அதிக அளவில் கூடும் சந்தை, பேருந்து நிறுத்தம், வணிகவளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் திரளாகக் கூடாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸின் காலடிச் சுவடுகள் நமக்கு இன்றும் ஆசி வழங்கி வருகின்றன. பிற்படுத்தப்பட்ட மக்களின் வளா்ச்சிக்கு அவா் உறுதுணையாக இருந்தாா். அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த பல திட்டங்கள் புரட்சிகரமானவை. அவரின் வழிகாட்டுதலை தொடா்ந்து நாம் பின்பற்ற வேண்டும்.
அடுத்த வாரம் தில்லிக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். அங்கு மத்திய அமைச்சா்கள் சிலரை சந்திக்க முடிவு செய்துள்ளேன். அவா்கள் நேரம் ஒதுக்கியதும், தில்லி செல்ல உள்ளேன் என்றாா்.