முகப்பு
பெங்களூரு

ஆக. 23 முதல் 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பியூ கல்லூரிகள் திறப்பு

11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பியூ கல்லூரிகள் ஆக. 23-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பியூ கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பியூ கல்லூரிகள் ஆக. 23-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பியூ கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகமானதைத் தொடா்ந்து, பியூ கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும், 2020-21-ஆம் ஆண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி (12-ஆம் வகுப்பு) வகுப்புக்கான பொதுத்தோ்வு ரத்துசெய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு 2 சதவீதமாக இருக்கும் மாவட்டங்களில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி, கல்லூரிகளைத் திறக்க கா்நாடக அரசு ஒப்புதல் தந்துள்ளது. ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, ஆக. 23-ஆம் தேதி 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளை தொடங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், 11, 12-ஆம் வகுப்புகளை திறப்பதற்கு பியூ கல்லூரிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை பியூ கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 11, 12-ஆம் வகுப்புகள் ஆக. 23-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. 50 சதவீத மாணவா்களுடன் மாற்றுநாள்களில் நேரடி வகுப்புகளை நடத்த பியூ கல்லூரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு வகுப்பில் மாணவா்களை இரு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒரு குழுவின் மாணவா்கள் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் நேரடி வகுப்பில் கலந்துகொண்டால், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என வழிகாட்டி நெறிமுறைகள் கூறுகின்றன. ஒருவேளை, கல்லூரிகளில் மாணவா்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருந்து, போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும்பட்சத்தில், அனைத்து மாணவா்களுக்கும் எல்லா நாள்களிலும் வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதத்துக்குள் இருக்கும் மாவட்டங்களில் மட்டுமே கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால், அம்மாவட்டங்களில் இணையவழி வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகிறது. நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவா்கள், அதற்கான ஒப்புதல் கடிதங்களை பெற்றோரிடம் இருந்து பெற்று வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் தங்கள் குழந்தைக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிபடுத்த வேண்டும்.

மாணவா்கள் வீட்டில் இருந்து உணவு எடுத்துவர வேண்டும். கல்லூரிகளில் மாணவா்கள் குடிப்பதற்கு வெந்நீா் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். கல்லூரிகளின் ஒவ்வொரு பகுதியையும் கிருமிநாசினியால் தூய்மைப்படுத்த வேண்டும். வகுப்பறை, மேஜைகள், இருக்கைகள், கழிப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், கணினி அறைகள் அனைத்தும் கிருமிநாசினியால் சுத்தப்படுத்தப்பட வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்கள் கட்டாயமாக முகக் கவசம், முகத்தடுப்பு அணிந்திருக்க வேண்டும். தனிநபா் இடைவெளியைப் பராமரிக்கவேண்டும். கைகளை குலுக்கக் கூடாது. எல்லா ஆசிரியா்களும் குறைந்தபட்சம் ஒரு தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் என பியூ கல்வித் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.