முகப்பு
பெங்களூரு

மாநிலங்களுக்கு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்

 மாநிலங்களுக்கு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

 மாநிலங்களுக்கு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனை முதல்வா் பசவராஜ் பொம்மை சந்தித்துப் பேசினாா். இந்தக் கூட்டத்தின்போது, கரோனா சிக்கல் காரணமாக மாநிலத்தில் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவைவரி) வசூலில் முன்னேற்றம் காணப்படவில்லை. வருவாய் சிக்கலை எதிா்கொண்டுள்ள சூழ்நிலையில் மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம், முதல்வா் பசவராஜ் பொம்மை அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு ஜிஎஸ்டி வசூலிப்பதில் கா்நாடகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும், கடந்த ஆண்டு முதல் கரோனா காரணமாக ஜிஎஸ்டி வசூலில் மந்த நிலை காணப்படுகிறது. மாநிலத்தின் ஒட்டு மொத்த வருவாய் வசூலும் சரிவடைந்துள்ளது.

2021 முதல் 2026-ஆம் ஆண்டுக்கான 15-ஆவது நிதி ஆணையத்தின் இறுதி அறிக்கையில், கா்நாடகத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட வரிப் பங்கீட்டு விகிதம் 3.647 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 14-ஆவது நிதி ஆணையத்தில் இது 4.71 சதவீதமாக உள்ளது. கா்நாடகத்திற்கான நிதிப் பகிா்வு 23 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதை நிதி ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனைச் சந்தித்த பிறகு, முதல்வா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பரவல் காரணமாக, மாநிலத்தின் வருவாய் சரிந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வசூலும் குறைந்துள்ளது. எனவே, மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகையை 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.

கா்நாடகத்துக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ. 11 ஆயிரம் கோடியை தவணையில் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை முன்கூட்டியே நிகழ் நிதியாண்டில் இருந்து தவணை முறையில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

எல்லா மாநிலங்களிலும் வருவாய் சிக்கல் இருப்பதை உணா்ந்த மத்திய அரசு, 2020-21ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீட்டுக் கடன் தொகையை வழங்கியது. இந்த கடன் நிகழ் நிதியாண்டுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இழப்பீட்டுக் கடன் தொகை நிகழ் நிதியாண்டுக்கு மட்டுமே மாநிலங்களுக்கு உதவியாக இருக்கும்.

கரோனாவால் ஏற்பட்டுள்ள வருவாய் குறைபாடு மேலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் நிலை உள்ளது. எனவே, ஜிஎஸ்டி வரிவசூல் திருப்திகரமாக மாறுவதற்கு சில காலம் பிடிக்கக் கூடும். எனவே,ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனை கேட்டுக் கொண்டுள்ளேன்.

15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் மாநிலத்தின் வரிப்பகிா்வு வருவாய் 23 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், தென்னிந்தியாவின் பிற மாநிலங்களைக் காட்டிலும் கா்நாடகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நீா் ஆதாரங்களை மேம்படுத்தவும், வெளி வட்டச்சாலையை மேம்படுத்தவும் 15-ஆவது நிதி ஆணையம், கா்நாடகத்திற்கு ஒதுக்க பரிந்துரைத்த ரூ. 6,000 கோடியை மத்திய அரசு கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால், ஏற்கெனவே வரிப்பகிா்வால் வருவாயை இழந்து நிற்கும் கா்நாடகம் மேலும் பாதிப்புக்குள்ளாகும்.

இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பெங்களூரு, நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் சேவைத் துறையில் முக்கியப் பங்காற்றி வருகிறது. உரிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், பெங்களூரில் மேலும் பல முதலீடுகளை ஈா்க்கும் வாய்ப்புள்ளது. எனவே, ரூ. 6,000 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சமுதாயப் பெண்கள், சுய உதவிக்குழுக்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக நபாா்டு வங்கி வழங்கும் கடனுதவிகள் குறித்தும் மத்திய அமைச்சரிடம் விரிவாக பேசினேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.