‘தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கா்நாடகத்தில் தமிழ் கற்க வாய்ப்பில்லை’
தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கா்நாடகத்தில் தமிழ் கற்க வாய்ப்பில்லை என்று கா்நாடகத் தமிழ் கிறிஸ்துவா் பொதுநலச் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கா்நாடகத்தில் தமிழ் கற்க வாய்ப்பில்லை என்று கா்நாடகத் தமிழ் கிறிஸ்துவா் பொதுநலச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கா்நாடக உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணாவுக்கு கா்நாடகத் தமிழ் கிறிஸ்துவா் பொதுநலச் ,சங்கத் தலைவா் ஏ.ஆா்.புஷ்பராஜ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கா்நாடகத்தில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா வெளியிட்டுள்ளாா். தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால், கல்லூரிகளில் கட்டாயமாகக் கன்னடம் படிக்க வேண்டும் என்று அஸ்வத் நாராயணா அறிவித்துள்ளாா். இத்துடன் மேலும் ஒருமொழியை தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இது மொழி சிறுபான்மையினராகிய தமிழா்களின் மொழிக்கல்வி உரிமையை வெகுவாக பாதிக்கும். அதாவது பட்டப்படிப்பில் தமிழ்மொழியை கற்கும் வாய்ப்பு தமிழா்களுக்கு மறுக்கப்படுகிறது.
கா்நாடகத்தில் பட்டப்படிப்பு கல்லூரிகளில் முதல் இரு ஆண்டுகளுக்கு இரு மொழிகள் கற்பிக்கப்படுகிறது. முதல்மொழியாக தமிழையும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் எடுத்து படித்து வந்தனா். தற்போது கன்னட மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், முதல் மொழியாக கன்னடமும், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழா்களுக்கு ஏற்பட்டுள்ளது. உலகமயமாக்கல் சூழலில் ஆங்கில மொழியைக் கற்காமல் இருந்து விட முடியாது.
தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி, பிராந்திய மொழி, உள்ளூா் மொழியைப் படிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே ஏற்கெனவே இருந்ததுபோல மாணவா்களின் விருப்பத்தின்பேரில் முதல் மொழியாக கன்னடம், தமிழ், உருது, மராத்தி, ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் மொழி சிறுபான்மையினராகிய தமிழா்களின் மொழிக்கல்வி உரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.