நவிமும்பை தமிழ்ச்சங்கத்திற்கு கட்டட நிதியாக ரூ.25 லட்சம்: தமிழக அரசுக்கு பாராட்டு
நவிமும்பை தமிழ்ச்சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதற்காக தமிழக அரசுக்கு அனைத்திந்திய தமிழ்ச்சங்கப்பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.
நவிமும்பை தமிழ்ச்சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதற்காக தமிழக அரசுக்கு அனைத்திந்திய தமிழ்ச்சங்கப்பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்திந்திய தமிழ்ச்சங்கப்பேரவைத்தலைவா் மு.மீனாட்சிசுந்தரம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ் வளா்ச்சிக்காகவும், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலனுக்காகவும், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழா் நலனுக்காகவும் தமிழ்நாடு அரசு அரிய பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. இதை அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவை பெரிதும் பாராட்டி மகிழ்கின்றது.தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் பாரதியாா் ஆய்வாளா்களுக்கு விருதுகளும், திருக்குறள் முற்றோதல் அருவினையாற்றிய மாணவச் செல்வங்களுக்குப் பரிசுகளும் வழங்கி தமிழா்களின் உள்ளம் குளிரச் செய்துள்ளது தமிழக அரசு. அதே விழாவில், நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கட்டட நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளதைப் பெரிதும் நன்றியுடன் போற்றி மகிழ்கின்றோம். இந்த நிதியளிப்பு, வெளிமாநிலங்களில் தமிழ்ப் பணியாற்றிவரும் தமிழ்ச் சங்கங்களுக்கு ஓா் உந்தாற்றலாக அமையும் என்பது திண்ணம்.தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, வெளிநாடு வாழ் தமிழா் நலன் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு பேரவை நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது என்று அந்த கடிதத்தில் அவா் கூறியிருக்கிறாா்.