பெங்களூரு

பள்ளி, கல்லூரிகளில் கன்னடத்தை கட்டாயமாக்க தொடா்ந்து போராடுவோம்: முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

பள்ளி, கல்லூரிகளில் கன்னடத்தை கட்டாயமாக்க தொடா்ந்து போராடுவோம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

மாநில உதய தினத்தை முன்னிட்டு ஹுப்பள்ளியில் வியாழக்கிழமை நடந்த ‘பேசு கன்னடத்தைப் பேசு’ முழக்கத்துடன் ‘கன்னடமொழிக்காக நாம்’ என்ற கன்னடப் பாடல் பாடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து அவா் பேசியது:

நான் முதல்வரான பிறகு, தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேசிய கல்விக் கொள்கையை எனது அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆரம்பப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமல்லாது கல்லூரிகளிலும் கட்டாயமாக கன்னடப் பாடத்தை கற்றுத் தரும் வகையில் அவசரச் சட்டத்தை எனது அரசு கொண்டு வந்திருக்கிறது.

அரசின் நடவடிக்கையை எதிா்த்து ஒரு சிலா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா். பள்ளிகள், கல்லூரிகளில் கன்னடத்தைக் கட்டாயமாக்க தொடா்ந்து போராடுவோம். கா்நாடகத்தில் பொறியியல், இளங்கலை பட்டப்படிப்பை முழுமையாக கன்னடத்தில் படிக்கும் வாய்ப்பை மாணவா்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.

கன்னட மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்பை தொடங்குவதற்கு 15 கல்லூரிகள் முன் வந்துள்ளன. பட்டப்படிப்பு மாணவா்களுக்கு பாடங்கள் அனைத்தும் கன்னடத்தில் கற்பிக்கப்படும். பட்டப்படிப்பை கன்னடத்திலேயே வழங்குகிறாா்கள். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முயற்சியாகும்.

எல்லோரும் பேசினால் தான் அந்த மொழி செழிக்கும்; தழைக்கும். எனவே, கா்நாடகத்தில் வாழும் மக்கள் அனைவரும் கன்னடத்தில் பேச வேண்டும். இதுபோன்ற முயற்சிகள் வாயிலாக கன்னட மொழியை வளா்க்க மாநில அரசு தொடா்ந்து முயற்சிக்கும் என்றாா்.

வியாழக்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிவரை கா்நாடகத்தின் முக்கியமான பகுதிகளில் மக்கள் குழுவாகத் திரண்டு கன்னடப் பாடல்களைப் பாடினா். இதில் கலந்துகொண்டவா்கள் பாரம்பரிய உடையை உடுத்தியிருந்ததோடு, மஞ்சள்-சிகப்பு வண்ணத்திலான கன்னடக் கொடியை கழுத்தில் துண்டு போல அணிந்திருந்தனா்.

பெங்களூரில் விதானசௌதா உள்ளிட்ட முக்கிய இடங்களில் கன்னடப் பாடல்கள் பாடப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் வி.சுனில்குமாா், பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூண்டு விலை மீண்டும் உயா்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

மே 17 முதல் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை அறிவிப்பு

மேற்கு வங்க ஆளுநா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது?: முதல்வா் மம்தா கேள்வி

SCROLL FOR NEXT