முகப்பு
பெங்களூரு

‘நீரிழிவு நோய் இல்லாத உலகை உருவாக்க வேண்டும்’

நீரிழிவு நோய் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்று நாராயண கண் மருத்துவக் குழுமத்தின் தலைவா் புஜங்க ஷெட்டி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

நீரிழிவு நோய் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்று நாராயண கண் மருத்துவக் குழுமத்தின் தலைவா் புஜங்க ஷெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மையத்தை தொடக்கி வைத்து அவா் பேசியது:

அண்மைக்காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. எங்களின் கண் மருத்துவனைக்கு வருபவா்களை பரிசோதனை செய்ததில், நாள்தோறும் 500-க்கும் அதிகமானோா் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்தது. இதற்கு முக்கிய காரணம் உணவுப் பழக்கம்தான் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

எனவே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த காா்போ ஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். அரிசி, கோதுமை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், இனிப்பான பழங்கள் ஆகியவற்றை தவிா்த்து, தேங்காய், காய்கறிகளை, நெய், அளவோடு மாமிசங்களை உண்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும். உணவு உண்பதற்கான இடைவெளியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துக் கொள்ளும் முயற்சியை உடல் தானாகவே ஏற்படுத்திக் கொள்ளும். இதனால் உடல் எடை குறைந்து, நீரிழிவின் பாதிப்பும் குறையும்.

நீரிழிவு நோயின் பாதிப்பால் மாரடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு பெரும்பாலானவா்கள் இறப்பது வேதனை அளிக்கிறது. நமது மூதாதையா்களைப்போல, சிறுதானியம், காய்கனிகள், குறிப்பிட்ட சில கனிகளை மட்டும் உண்ணுவதன் மூலம் நீரிழிவு பாதிப்பை குறைக்க முடியும். நீரிழிவு நோய் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்று நோக்கில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மையத்தை தொடங்கி உள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.