வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா!
வலங்கைமான் புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா இன்று(மார்ச் 22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம்: வலங்கைமான் புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா இன்று(மார்ச் 22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிப் பெருந்திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் கடந்த 8 ஆம் தேதி முதல் காப்பு காட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்படுகிறது.
Advertisement
Advertisement
இரவு அம்மன் வீதியுலாவும், பல்வேறு சிறப்பு நிகழ்சிகளும் நடைபெறுகிறது.
பங்குனிப் பெருந்திருவிழாவின் முக்கிய விழாவான பாடைக்காவடி திருவிழா பங்குனி 8 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது .
உயிர்போகும் நிலையில் நோய்வாய் பட்டவர்கள் அதிலிருந்து விடுபட்டால், பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக அம்மனிடம் வேண்டுதல் செய்து கொள்வார்கள் .
நோயிலிருந்து விடுபட்டு குணமானவுடன் இத்திருநாளில் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். குழந்தைகளைத் தொட்டில் காவடியில் சுமந்து வருவார்கள்.
நோயிலிருந்து விடுபட்டவர்களை ஆற்றில் நீராட செய்து, பச்சை பாடையில் படுக்கவைத்து, நான்கு பேர் பாடைக்காவடியை சுமந்துவர, உறவினர் ஒருவர் தீச்சட்டியை கையில் எடுத்து வருவார்கள். மற்ற உறவினர்கள் பாடைக்காவடியை பின் தொடர்ந்து வருவார்கள்.
வலங்கைமான் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிராமிய வாத்தியங்கள் முழங்க வலம் வந்து, பாடைக்காவடி கோயிலை மூன்றுமுறை சுற்றி வந்து, கோயில் கொடிமரம் அருகில் இறக்கி வைக்கப்படும்.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர் .
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வலங்கைமான் போலீஸார் உள்பட காவலர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர் . விழாவையொட்டி வழக்கம்போல போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது.
கோயில் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார் க. மும்மூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர் .
The Padaikavadi festival was held at the famous Mahamariamman Temple in Valangaiman today (March 22) on Sunday. A large number of devotees participated in it.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.