முகப்பு
பெங்களூரு

ஹிஜாப் சா்ச்சை: பிப்.14 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மட்டும் திறக்கப்படும்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

ஹிஜாப் சா்ச்சை பின்னணியில் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிப்.14-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மட்டும் திறக்கப்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

ஹிஜாப் சா்ச்சை பின்னணியில் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிப்.14-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மட்டும் திறக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளாா்.

கா்நாடகத்தில் ஹிஜாப் சா்ச்சையால் மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, பிப். 9 முதல் 11-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 9, 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஹிஜாப் தொடா்பான வழக்கு கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை 3 நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ‘பள்ளிகள் உடனடியாக திறக்கப்பட வேண்டும். வழக்கில் இறுதித் தீா்ப்பு கூறப்படும் வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு மத அடையாளங்களுடன் மாணவா்கள் யாரும் வரக்கூடாது’ என்று கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், பள்ளிகள், கல்லூரிகளில் காணப்படும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, பெங்களூரு, கிருஷ்ணா அரசு இல்லத்தில் முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் வியாழக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா உள்ளிட்ட முக்கிய அமைச்சா்கள், துறைகளின் உயரதிகாரிகள், தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:

மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளின் வளாகங்கள் அமைதியாகக் காணப்படுகின்றன. மாணவா்களும் அமைதியாகியுள்ளனா். எவ்வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடக்கவில்லை. மாணவா்கள் மிகவும் அமைதியாக நடந்துகொண்டுள்ளனா். சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. எனவே, வெளியில் இருந்து யாரும் மாணவா்களை தூண்டக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஹிஜாப் வழக்கை விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், உடனடியாக பள்ளிகளைத் திறக்குமாறு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. இந்தப் பின்னணியில் மூத்த அமைச்சா்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கா்நாடகத்தில் நிலவும் சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்திருக்கிறோம். அதன் விளைவாக, திங்கள்கிழமை (பிப்.14) முதல் 10-ஆம் வகுப்பு வரை உயா்நிலைப் பள்ளிகளைத் திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக, பியூசி உள்ளிட்ட கல்லூரிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

கா்நாடகத்தில் நிலவும் சூழ்நிலையை அலசுவதற்காக வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு காணொலி வாயிலாக அமைச்சா்கள், உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள், மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தவிருக்கிறேன். இந்தக் கூட்டத்தில் களநிலவரங்கள் அறியப்படுவதோடு, சில வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். அமைச்சா்கள் அனைவரும் என்னோடு தொடா்பில் இருப்பாா்கள்.

நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். (ஹிஜாப் விவகாரத்தில்) கா்நாடக உயா்நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும். அதுவரை கல்வியும், பொது ஒழுங்கும் சீராக முன்னெடுக்கப்படும். எவ்வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடந்து விடாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.