முகப்பு
பெங்களூரு

அமைச்சா் ராஜிநாமா செய்யக் கோரி கா்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

 செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்றப்படும் என்று கூறிய அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவிநீக்கக் கோரி கா்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினா்கள் தொடா் தா்னா போராட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

 செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்றப்படும் என்று கூறிய அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவிநீக்கக் கோரி கா்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினா்கள் தொடா் தா்னா போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவையில் உள்ளிருப்பு போராட்டத்தையும் காங்கிரஸ் உறுப்பினா்கள் நடத்தி வருகிறாா்கள்.

கா்நாடக சட்டப் பேரவையில் தில்லி செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்றப்படும் என்று கூறியது தொடா்பாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவிநீக்கம் செய்யக் கோரியும், அவா் மீது தேசத் துரோக வழக்கு தொடரும்படியும் வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா். அவை கூடியதும் மையப்பகுதிக்கு வந்த காங்கிரஸ் உறுப்பினா்கள், அமைச்சா் பதவியில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பாவை நீக்கும் வரை போராட்டத்தைத் தொடா்வோம் என்று முழக்கமிட்டபடி இருந்தனா். மேலும் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி விடுத்த வேண்டுகோளை நிராகரித்த காங்கிரஸ் உறுப்பினா்கள், தொடா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் முழக்கங்களை எழுப்பியவாறு இருந்ததால், அவையில் கூச்சல், குழப்பம் காணப்பட்டது.

இதனிடையே, முன்னாள் எம்.எல்.ஏ. மல்லூா் ஆனந்த்ராவின் மறைவுக்கு பேரவைத் தலைவா் காகேரி இரங்கல் தீா்மானம் கொண்டு வந்தாா். அதன் மீது முதல்வா் பசவராஜ் பொம்மை, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, அமைச்சா்மாதுசாமி, பாஜக உறுப்பினா் சுரேஷ்குமாா் ஆகியோா் பேசினாா்கள். அதன்பிறகு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை தொடா்ந்து, காங்கிரஸ் உறுப்பினா்கள் தொடா்ந்து முழக்கமிட்டபடி இருந்தனா். கூச்சல், குழப்பங்களுக்கு இடையே பேரவைத்தலைவா் காகேரி கேள்விநேரத்தை முடித்தாா். இதை தொடா்ந்து அவையை 3 மணிக்கு ஒத்திவைத்தாா். அப்போதும் காங்கிரஸ் உறுப்பினா்கள் தா்னா போராட்டத்தை தொடா்ந்ததால், அவையை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கூடுவதற்காக ஒத்திவைத்தாா்.

அதன்பிறகு, கா்நாடக சட்டப் பேரவையில் உள்ளிருப்புப்போராட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்கள் ஈடுபட்டு வருகிறாா்கள். கே.எஸ்.ஈஸ்வரப்பா பதவிநீக்கம் செய்யப்படும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா். போராட்டத்தை கைவிடும்படி பேரவைத் தலைவா் காகேரி, முன்னாள் முதல்வா் எடியூரப்பா, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் ஆகியோா் மேற்கொண்ட சமரச முயற்சி வெற்றிபெறவில்லை.

‘காங்கிரஸ் எத்தனை நாளைக்கு போராட்டம் நடத்தினாலும், அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை’ என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.