முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எந்தப் புளி ஆரோக்கியத்துக்கு நல்லது?

புதுப்புளி, பழைய புளி - உடல் ஆரோக்கியத்துக்கு எது நல்லது? எப்படி மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தலாம்?

Updated On : 22 மார்ச் 2026, 4:09 am IST
பகிர்:

புதுப்புளி, பழைய புளி -உடல் ஆரோக்கியத்துக்கு எது நல்லது? எப்படி மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தலாம்?

-வனஜா, மன்னார்குடி.

புதுப்புளிக்குப் பலவிதத்திலும் மாறுபட்டுள்ள குணமுள்ளது பழைய புளி. பழைமை சீக்கிரம் உண்டாக, விதை கோது நீக்கி மூன்று மாதத்துக்குக் குறையாமல் பானைகளிலிட்டு மூடி வேடுகட்டி வைப்பதும், அடிக்கடி வெயிலில் வைப்பதும் கிராம வழக்கம்.

Advertisement

Advertisement

வயிற்றில் உள்ள ஜீரணத் திரவங்கள் நல்ல சக்தி பெறவும், செரிமானம் நன்கு ஏற்படவும் பழைய புளி தினசரி உணவுப் பொருள்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

புளியை சிறிய அளவில் அதிகப்படுத்தி உணவாகச் சாப்பிட, வாயில் குழகுழப்பும், நாக்கில் தடிப்பும், மாவு படிதலும் நீங்கிவிடும். வாயிலுள்ள எச்சில் சுரப்பிகள் கபத்தாலோ, அஜீரணத்தாலோ அடைபட்டு நாவறட்சி ஏற்படும்போது வாயில் உமிழ் நீர் கோளங்களைத் திறக்கச் செய்து, வறட்சியைப் போக்கும்.

பித்தப் புளிப்பு அதிகம் சுரந்து ஏற்படும் புண், வாயில் பொது வேக்காளம் அல்லது நாக்கு எகிறு உதடு, கன்னம், கடைவாய் இவைகளில் குழிப்புண் ஏற்பட்டுள்ள நிலை, நாக்கில் எப்போதும் உமிழ்நீர்க் கசிவு மிகுந்துள்ள நிலையிலும் புளி நீக்கிய உணவே ஏற்றது.

வாயில் உள்ள இனிப்பான உமிழ் நீரும், இரைப்பையில் புளிப்பான ஜீரணத் திரவமும், சிறுகுடலில் கசப்பான ஜீரணத் திரவமும் செரிமானத்தின் பல்வேறு நிலைகளில் உதவுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று தற்காலிகமாகக் கூடினாலோ குறைந்தாலோ பாதகம் ஏற்படுவதில்லை. ஆனால், தொடர்ந்து குறைந்தோ கூடியோ இருந்தால் ஜீரணம் பாதிக்கப்படுகிறது. புளித் திரவங்கள் சக்தி குறைந்த நிலையில், அதற்குச் சக்தி கூட்ட புளிப்பு தூக்கலாக உள்ள புளி வத்தல் குழம்பு, புளி இஞ்சிப் பச்சடி, புளி மிளகாய்ப் பச்சடி போன்றவை அதிகம் உதவுகின்றன. எளிதில் ஜீரணமாக புளி வத்தல் குழம்பும், புளி மிளகுக் குழம்பும் உதவுகின்றன.

புளி சேர்க்கக்கூடிய ரசம் தயாரிப்பில், புளிப்புத் திரவங்களின் சக்தி மிகவும் குறைந்துள்ள நிலையில் புளி தூக்கலாகவும், பித்தம்கூடி வயிற்றுப் பிரட்டல் அதிகரிக்கும்போது பருப்புக்கூட்டு ரசம் அதிகமாகவும், வயிற்றில் புளிப்பு மிகும் நிலையில் புளியே சேராமல் பொரித்த ரசமாகவும் தயாரித்தல் வழக்கத்திலுள்ளது.

நாக்கில் ருசி-புசி இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் நன்கு பழமான புளியை தண்ணீரில் வேகவைத்துக் கசக்கிப் பிழிந்து சர்க்கரை சேர்த்துப் பானகமாக்கிச் சாப்பிடுவது நல்லது. பித்தக் காய்ச்சலில் ஏற்படும் நாவறட்சி-மலக்கட்டைப் போக்க இதைச் சாப்பிடுவதும் நல்லதே.

வேதனையில்லாமல் மலமிளகிப்போக, பழைய புளி பத்து கிராம், சூரத்து நிலாவரை மூன்று கிராம், கொத்துமல்லி விதை மூன்று கிராம் எடுத்து, இதை 6 - 8 அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் 30 மி.லி.) கொதிக்கும் வெந்நீரில் 2 மணிநேரம் ஊறவைத்துக் கசக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை 3 ஸ்பூன் சேர்த்துச் சாப்பிட உதவிடும். புளியைக் கொதிக்கும் வெந்நீரிலிட்டுக் கரைத்து வடிகட்டி அதில் பனங் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட சீத பேதி, ரத்தக் கடுப்பு நிற்கும்.

உள்நாக்கு வளர்ச்சி குறைய புளியையும் உப்பையும் சம அளவில் கலந்து பிசைந்து சிறிது தேன் சேர்த்து இளக்கிப் பஞ்சில் தோய்த்துத் தடவிக் கொள்ளவும்.

உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலி, கண் எரிச்சல், தாபம் நீங்க, பசி உண்டாக, நாக்கில் ருசி தெளிவாக - புளியை நீரில் கரைத்து, அதில் மிளகு, கிராம்பு, ஏலம் இம்மூன்றையும் சிறிது தூளாக்கிக் கலந்து சர்க்கரை, பச்சைக் கற்பூரம் சேர்த்துச் சாப்பிடவும்.

ஆஸனவாய் வெளித்தள்ளல் நிற்க புளியையும் கரிசலாங்கண்ணியையும் சம அளவு சேர்த்து அரைத்து 1 - 2 கொட்டைப் பாக்களவு சாப்பிடவும். பழத்தின் மேலோட்டைப் பொடித்துத் தூளாக்கிப் பல் துலக்கிவர பற்களின் எகிறுகள் வலுப்பட்டுப் பல்லிறுகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments