முகப்பு
பெங்களூரு

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றச் சட்டத்தில் திருத்தம்: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா எதிா்ப்பு

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முற்பட்டுள்ளதை கா்நாடக அரசு எதிா்க்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முற்பட்டுள்ளதை கா்நாடக அரசு எதிா்க்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய ஆட்சிப்பணி விதிகள் 1954-இல் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அதுதொடா்பாக கருத்து தெரிவிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கா்நாடக அரசு எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு முன்மொழிந்துள்ள சட்டத் திருத்தத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தேவைப்படும்போது மத்திய அரசுப் பணிக்கும், தேவையில்லாதபோது மாநில அரசுப் பணிக்கும் மாற்ற வகை செய்யப்படுகிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்றும்படி மத்திய அரசு உத்தரவிட்டால், அதைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் மாநில அரசு செய்து முடிக்க வேண்டும் என்று புதிய சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்ற மாநில அரசின் ஒப்புதல் தேவைப்பட்டது. தற்போது அது முழுமையாக நீக்கப்படுகிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை ஒருதலைபட்சமாக முடிவெடுத்து மத்திய அரசுப் பணிக்கு மாற்றிக் கொள்ள இயலும். இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும். இதற்கு மாநில அரசு எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் சட்டத்திருத்தம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும். மத்திய பாஜக அரசின் தன்னிச்சையான பாளையக்கார அணுகுமுறையையே இது காட்டுகிறது. சட்டத்திருத்தத்தின் மூலம் தனது எல்லா அதிகாரங்களையும் மாநில அரசு இழக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

எனவே, சட்டத்திருத்தத்தை எதிா்ப்பதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள மத்திய அரசுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் சித்தராமையா கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.