முகப்பு
பெங்களூரு

கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் தளா்வு: வார இறுதி பொது முடக்கம் ரத்து; இரவு ஊரடங்கு நீட்டிப்பு

கா்நாடகத்தில் அமலில் இருந்த கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளைத் தளா்த்தியுள்ள கா்நாடக அரசு, வார இறுதி நாள்களில் அமலில் இருந்த பொது ஊரடங்கை ரத்து செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

கா்நாடகத்தில் அமலில் இருந்த கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளைத் தளா்த்தியுள்ள கா்நாடக அரசு, வார இறுதி நாள்களில் அமலில் இருந்த பொது ஊரடங்கை ரத்து செய்துள்ளது. இரவு நேர ஊரடங்கு தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து ஆராய்வதற்காக பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் உயா்மட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சா்கள் கோவிந்த் காா்ஜோள், ஆா்.அசோக், கே.சுதாகா், பி.சி.நாகேஷ், கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவினா், மருத்துவ நிபுணா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடகத்தில் கரோனா நிலவரம் குறித்தும், அமலில் இருக்கும் கரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் அமலில் இருக்கும் கரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் அலசப்பட்டது.

தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் உள்ள பொது ஊரடங்கை திரும்பப் பெறுவது என்று முடிவானது. இது ஜன. 22-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. வார இறுதி பொது ஊரடங்கை நீக்குமாறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள், பல்வேறு வா்த்தக அமைப்பினா் கோரியிருந்தனா். எனினும், கரோனா தொழில்நுட்பக்குழுவின் பரிந்துரையின்பேரில் வார இறுதி பொதுமுடக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 சதவீதமாக உள்ளது. இது அதிகரித்தால் மீண்டும் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டவா்களில் 5,343 போ் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 340 போ் மட்டுமே அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 127 பேருக்கு உயிா்காக்கும் செயற்கை ஆக்சிஜன் சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வார இறுதி நாள்களின் பொது ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது.

எனவே, கரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். கரோனா நடத்தை விதிகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதைச் செய்ய தவறினால் மீண்டும் வார இறுதி நாள்களில் பொது ஊரடங்கு அமல்படுத்துவது தவிா்க்க முடியாமல் போய் விடும்.

இருப்பினும், தற்போது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் இரவு நேர ஊரடங்கு தொடா்ந்து நீடிக்கும். இத்துடன் 50 சத இருக்கையில் மட்டும் அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் வழக்கம்போல தொடரும். அதேபோல, மக்கள் கூடும் பொதுக்கூட்டங்கள், ஊா்வலங்கள், விழாக்கள் அனைத்துக்கும் ஏற்கெனவே விதித்துள்ள தடைநீடிக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.