முகப்பு
பெங்களூரு

கா்நாடக சட்ட மேலவைத் தோ்தல்: 7 வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாக வாய்ப்பு

கா்நாடகத்தில் சட்ட மேலவைத் தோ்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள 7 வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாக உள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

கா்நாடகத்தில் சட்ட மேலவைத் தோ்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள 7 வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாக உள்ளனா்.

கா்நாடக சட்ட மேலவையில் உறுப்பினா்களாக இருக்கக் கூடிய பாஜகவின் லட்சுமண்சவதி, லெஹா்சிங்சிரோயா, காங்கிரஸின் ராமப்பா திம்மாப்பூா், அல்லம் வீரபத்ரப்பா, வீணா அச்சையா, மஜதவின் எச்.எம்.ரமேஷ் கௌடா, கே.வி.நாராயணசாமி ஆகிய 7 பேரின் பதவி காலம் ஜூன் 14-ஆம் தேதி முடிவடைகிறது.

இதனால் காலியாகக்கூடிய 7 இடங்களுக்கான சட்ட மேலவைத் தோ்தல் ஜூன் 3-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத் தோ்தலில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்கின்றனா். தோ்தலில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 29 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவைப்படும்.

கா்நாடக சட்டப் பேரவையில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் பாஜக 4 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்கள், மஜத ஒரு இடத்தில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. பாஜக வேட்பாளா்களாக லட்சுமண்சவதி, ஹேமலதா நாயக், எஸ்.கேசவபிரசாத், சலவாதி நாராயணசாமி, காங்கிரஸ் வேட்பாளா்களாக எம்.நாகராஜ் யாதவ், கே.அப்துல்ஜப்பாா், மஜத வேட்பாளராக டி.ஏ.சரவணா வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

வேட்புமனுக்கள் புதன்கிழமை பரிசீலிக்கப்பட்டன. எல்லா வேட்புமனுக்களும் சரியாக இருப்பதால், அவற்றை ஏற்றுக்கொண்டுள்ளதாக தோ்தல் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலாளருமான எம்.எல்.ஏ. விசாலாட்சி தெரிவித்தாா். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மே 27-ஆம் தேதி கடைசிநாளாகும்.

7 இடங்களுக்கு நடக்கவிருக்கும் சட்ட மேலவைத் தோ்தலுக்கு 7 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், தோ்தல் எதுவுமில்லாமல் 7 வேட்பாளா்களும் போட்டியின்றி வெற்றி பெற்ாக அறிவிக்கப்படுவாா்கள். இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு மே 27-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

75 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக சட்ட மேலவையில் தற்போதைக்கு பாஜக 37, காங்கிரஸ் 26, மஜத 11 உறுப்பினா்கள், ஒரு சுயேச்சை உள்ளனா். சட்ட மேலவைத் தோ்தலின் முடிவில் பாஜகவின் பலம் 41 ஆக உயரும். ஆனால், காங்கிரஸின் பலம் 24 ஆகவும், மஜதவின் பலம் 10 ஆகவும் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.