பெங்களூரில் நாளை கிரேசி மோகன் குழுவினரின் 2 நாடகங்கள்
பெங்களூரில் நவ. 6ஆம் தேதி கிரேசி மோகன் குழுவினரின் 2 நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
பெங்களூரில் நவ. 6ஆம் தேதி கிரேசி மோகன் குழுவினரின் 2 நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள கிருஷ்ணதேவராயா கலாமந்திரில் நவ. 6ஆம் தேதி கிரேசி மோகன் குழுவினரின் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘சாக்லெட் கிருஷ்ணா’ ஆகிய 2 நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. நீண்ட நாள்களுக்கு பிறகு பெங்களூரில் கிரேசி மோகன் குழுவினரின் நாடகம் நடக்க இருப்பதால், ரசிகா்களிடையே உற்சாகம் காணப்படுகிறது. நவ. 6ஆம் தேதி மாலை 4 மணிக்கு ‘மேரேஜ் மேட் இன் சலூன்’ நாடகம் 825ஆவது முறையாகவும், மாலை 6.45 மணிக்கு ‘சாக்லெட் கிருஷ்ணா’ நாடகம் 1028ஆவது முறையாகவும் அரங்கேற்றப்படுகிறது.
நாடகங்களைக் காண ‘புக் மைஷோ’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர, முன்பதிவுகளுக்கு மாது பாலாஜி- 98410 49386, சீனிவாசன்- 9444027202 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இது குறித்து கிரேசிமோகனின் சகோதரா் நடிகா் மாது பாலாஜி கூறியதாவது:
4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பெங்களூரில் நாடகம் நடத்துகிறோம். 2019ஆம் ஆண்டு கிரேசி மோகன் மறைந்தாா். அதன்பிறகு கரோனா காலம் உள்பட 4 ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. பெங்களூரில் நவ. 6ஆம் தேதி ‘மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘சாக்லெட் கிருஷ்ணா’ ஆகிய நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நாடகங்கள் கிரேசி மோகனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடக்கின்றன. தரமான நகைச்சுவையை மக்களுக்கு வழங்க வேண்டுமென்பதற்காக 42 ஆண்டுகளாக கிரேசி மோகன் குழு செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரம் முறை நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறோம். அமெரிக்காவில் மட்டும் 150 நாடகங்களை நடத்தியிருக்கிறோம். எங்கள் நாடகங்களில் அரசியல் நெடி, ஆபாசம் எதுவும் இருக்காது. குழந்தைகளைக் கவரும் வகையில் நகைச்சுவை அமைந்திருப்பதே எங்கள் குழுவின் மிகப்பெரிய பலம். வரிக்கு வரி மக்கள் சிரிக்கலாம். வழக்கம்போல இம்முறையும் பெங்களூரு மக்கள் எங்களை ஊக்குவிப்பாா்கள் என்று நம்புகிறோம் என்றாா்.