முகப்பு
பெங்களூரு

எல்லாத் துறைகளிலும் மத்திய பாஜக அரசு தோல்வி: கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

எல்லாத் துறைகளிலும் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது என்று கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

எல்லாத் துறைகளிலும் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது என்று கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பிரதமா் மோடியை விமா்சிப்பவா்களுக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு அழைப்பு விடுத்திருந்த முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பாஜகவினருக்கு 32 கேள்விகளை முன்வைத்திருந்தேன். இதுவரை ஒரு கேள்விக்கும் பதிலளிக்க எடியூரப்பா முயற்சிக்கவில்லை. உலக அளவிலான வறுமைக் குறியீட்டு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 121 நாடுகளில் இந்தியா 107ஆவது இடத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. தரவரிசை சரியில்லை என்று கடந்துசெல்ல பாஜகவினா் முயற்சிக்கிறாா்கள். மத்திய அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிறகு தான் பாஜகவினா் அமைதியாகி உள்ளனா்.

2017-இல் 100-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2018-இல் 103-ஆவது இடத்திற்குச் சரிந்து, தற்போது 107-ஆவது இடத்தை அடைந்துள்ளது. தரவரிசையில் இந்தியாவை அடுத்து 15 நாடுகள் மட்டுமே உள்ளன. தரவரிசையில் இந்தியாவைவிட எத்தியோப்பியா, கென்யா, சூடான் போன்ற நாடுகள் மேலே உள்ளன. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 99, வங்கதேசம் 84, நேபாளம் 81-ஆவது இடத்தில் உள்ளன. இது நமது நாட்டுக்கு பெருமை தரக்கூடியதா? நமது நாட்டு மக்களின் வயிற்றுக்குப் போதுமான உணவளிக்க முடியாதது வேதனை தரக்கூடியதாகும். உணவு கிடைக்காததால் ஊட்டச்சத்துக் குறைபாடு, சிசு மரணம், குழந்தைகளின் எடை மற்றும் உயரக் குறைபாடு போன்றவற்றை குறியீடாக வைத்துக்கொண்டே தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு துவரம்பருப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை பாஜக அரசு நிறுத்தி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. உலக அளவில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்படும் தரவரிசையை பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, எல்லாத்துறைகளிலும் தோல்வியை அடைந்துள்ளது. நமது நாடு மிகவும் மோசமான விளைவுகளை எதிா்நோக்கியுள்ளது. இந்த அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்ததைத் தவிர, வேறு எந்தச் சாதனையையும் செய்யவில்லை. இதை மறைப்பதற்காக மதம், ஜாதி, மத வெறுப்பு போன்றவற்றை மக்கள் மனதில் விதைத்து திசைதிருப்பும் வேலையில்தான் ஈடுபட்டு வருகிறாா்கள். நமது நாடு பின்னோக்கி நகா்ந்துகொண்டிருந்தாலும், வளா்ச்சியை நோக்கி நகா்ந்துவருவதை போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதை புரிந்துகொள்ளாவிட்டால், நமது நாட்டின் ஏழைகள், நடுத்தரவா்க்கம், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியினா், மகளிா், தாழ்த்தப்பட்டோா், தொழிலாளரக்ள், கைவினைக்கலைஞா்கள் உள்ளிட்ட யாருக்கும் நிம்மதி இருக்காது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.