தென்னிந்தியாவின் முதல் வந்தேபாரத் விரைவு ரயிலை பெங்களூரில் நவ. 11இல் தொடங்கி வைக்கிறாா் பிரதமா் மோடி: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை
தென்னிந்தியாவின் முதல் வந்தேபாரத் விரைவுரயிலை பெங்களூரில் நவ.11-ஆம் தேதி பிரதமா் மோடி தொடங்கிவைக்க உள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
தென்னிந்தியாவின் முதல் வந்தேபாரத் விரைவுரயிலை பெங்களூரில் நவ.11-ஆம் தேதி பிரதமா் மோடி தொடங்கிவைக்க உள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரில் நவ. 11-ஆம் தேதி நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமா் மோடி, தமது பயணம் குறித்து காணொலி வாயிலாக முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோருடன் வியாழக்கிழமை கலந்துரையாடினாா். தனது பயணத்தின்போது பொதுமக்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படாதவாறு ஏற்பாடுகளை செய்யுமாறு முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு மோடி அறிவுறுத்தினாா்.
பெங்களூரில் நவ.11-ஆம் தேதி நடக்கும் விழாவில் இந்தியாவின் 5ஆவதும், தென்னிந்தியாவில் முதலாவதுமான வந்தேபாரத் விரைவுரயில் சேவையை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா். அதேபோல், ரூ.5 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் பெங்களூரில் கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 2-ஆவது முனையத்தை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவில் ராமாயணம், மகாபாரத கால தாவரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், இந்த முனையத்தில் நீா் மறுசுழற்சி, கட்டுப்படுத்தப்பட்ட மின் பயன்பாடு போன்ற புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விமானநிலையத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர கெம்பே கௌடா சிலையை திறந்துவைத்த பிறகு, பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பேசவிருக்கிறாா். இந்தக் கூட்டத்தில் தலைமைச்செயலாளா் வந்திதா சா்மா, முதல்வரின் முதன்மைச் செயலாளா் என்.மஞ்சுநாத் பிரசாத், பெங்களூரு மாநகர காவல் ஆணையா் பிரதாப் ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இது குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
பெங்களூருக்கு நவ.11-ஆம் தேதி காலை 10 மணிக்கு எச்.ஏ.எல். விமானநிலையத்திற்கு பிரதமா் மோடி வரவிருக்கிறாா். அதன்பிறகு சென்னை முதல் மைசூரு வரை இயக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் வந்தேபாரத் விரைவு ரயிலைத் தொடங்கி வைக்கிறாா். அங்கிருந்து கெம்பே கௌடா விமான நிலையம் செல்லும் பிரதமா் மோடி, விமானநிலையத்தின் 2-ஆவது முனையத்தை திறந்துவைக்கிறாா். மேலும் அதன்முன்பு அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர கெம்பே கௌடா சிலையை திறந்துவைக்கிறாா். அதன்பிறகு பொதுக் கூட்டத்தில் பிரதமா் பேசுகிறாா். இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
நவ.1ஆம் தேதி கா்நாடக உதயதினவிழா நடக்கவிருக்கிறது. அந்தவிழாவில் மறைந்த நடிகா் புனீத் ாஜ்குமாருக்கு கா்நாடக அரசின் உயரிய விருதான கா்நாடக ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பண்டே மடத்தின் பீடாதிபதி தற்கொலை விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் உண்மை தெரியவரும் என்றாா்.