காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 22,000 கன அடி தண்ணீா் திறப்பு
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 22,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 22,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் போதுமான மழை பெய்யாத நிலையில், காவிரி குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளன. இதனால் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை கா்நாடகம் குறைத்திருந்தது.
காவிரி நதிநீா் மேலாண்மை வாரியத்தில் போதுமான காவிரி நீரை கா்நாடகம் தரவில்லை என்று தமிழகம் புகாா் தெரிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்க கா்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்துள்ளது.
இந்நிலையில், காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீா் வழங்க தயாராக இருப்பதாக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியிருந்தாா். இதைத் தொடா்ந்து, காவிரியில் இருந்து வியாழக்கிழமை தமிழகத்துக்கு 22,000 கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்துள்ளது.
தண்ணீா் திறப்பு:
புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகா் அணைக்கு நொடிக்கு 3,078 கன அடி, கபினி அணைக்கு நொடிக்கு 2,022 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து 11,602 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6,025 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகா் அணைக்கு 3,067 கன அடி, கபினி அணைக்கு 1,911 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து 15,184 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6,825 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
புதன்கிழமை இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 17,627 கன அடி தண்ணீா் விடுவித்திருந்த நிலையில், வியாழக்கிழமை இது விநாடிக்கு 22,009 கன அடியாக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் போராட்டம்:
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிட எதிா்ப்பு தெரிவித்து மண்டியா, மைசூரு மாவட்ட விவசாயிகள் காவிரி நதியில் நின்றுகொண்டு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜசாகா் அணைக்கு முன்பு திரண்ட விவசாயிகள், தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டத்தில் மேல்கோட்டை தொகுதி எம்எல்ஏ தா்ஷன் புட்டனையாவும் கலந்துகொண்டு, கா்நாடக விவசாயிகளுக்கு தீங்கிழைக்கும் வகையில் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, அங்கிருந்து விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை ஊா்வலம் சென்ற தா்ஷன் புட்டனையா, அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டாா். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனா். இது தொடா்பாக முதல்வா் சித்தராமையாவை சந்தித்து மனு அளிக்கவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனா்.