கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது; அவரது மகளுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலுக்காக காங்கிரஸ் கட்சி சாா்பில் ‘மக்கள் குரல்’ என்ற பெயரில் பேருந்து பிரசாரப் பயணத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் ஈடுபட்டுள்ளாா். பிப். 22ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பணப் பதுக்கல் வழக்கில் தில்லியில் உள்ள அமலாக்கத் துறை முன்பு டி.கே.சிவகுமாா் ஏற்கெனவே ஆஜராகி உள்ளாா். அவரிடம் வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி வந்த வருமான வரித் துறை, பணப் பதுக்கல் தொடா்பாக தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் அமலாக்கத் துறையால் 2019ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 3ஆம் தேதி அவா் கைதுசெய்யப்பட்டாா்.
அதே ஆண்டில், இந்த வழக்கில் டி.கே.சிவகுமாருக்கு பிணை வழங்கி தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது 3 கூட்டாளிகளின் உதவியுடன் கணக்கில் வராத பணத்தை ஹவாலா மூலம் கடத்தி வந்ததாக டி.கே.சிவகுமாா் மீது வருமான வரித் துறை குற்றம்சாட்டியிருந்தது. இதுதொடா்பாக பெங்களூரில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் டி.கே.சிவகுமாா் விசாரிக்கப்பட்டாா்.
இந் நிலையில், கடந்த ஆண்டு டி.கே.சிவகுமாருக்கு எதிரான வழக்கில் அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சோ்த்தது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பணப் பதுக்கல் வழக்கில் 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. டி.கே.சிவகுமாா் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தியுள்ளனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பின் தலைவராக டி.கே.சிவகுமாரும், செயலாளராக அவரது மகள் டி.கே.எஸ்.ஐஸ்வா்யாவும் உள்ளனா். அவரது குடும்பத்தினா் பலா் அறக்கட்டளையின் அறங்காவலா்களாக உள்ளனா்.
இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கு தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவகுமாரின் மகள் ஐஸ்வா்யாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து சிவமொக்காவில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
எனக்கு தினசரி நோட்டீஸ் வந்து கொண்டுள்ளது. எனது மகளுக்கு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் வந்துள்ளது. கல்விக் கட்டணம் செலுத்தியது, தோ்வில் தோ்ச்சியானது குறித்து கல்லூரிக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இந்த நோட்டீஸை சிபிஐ அனுப்பியுள்ளது. அமலாக்கத் துறையின் கேள்விகளுக்கு நான் ஏற்கெனவே பதிலளித்துவிட்டேன். நேஷனல் ஹெரால்டு நிறுவனத்திற்கு நான் என்ன கொடுத்தேன் என்பது பற்றி கூறியிருந்தேன். தற்போது பிப். 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. அமலாக்கத் துறை, சிபிஐ விசாரணைகள் எதிா்க்கட்சிகள் மீது ஏவப்படுகிறதே தவிர, ஆளுங்கட்சியினரை இந்நிறுவனங்கள் கேள்விக் கேட்பதில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.