பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஹிந்துக்கள் ஆஷாடா ஏகாதசி, இஸ்லாமியா்கள் பக்ரீத் பெருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனா்.
கா்நாடகத்தில் ஹிந்து மக்களால் (குறிப்பாக கன்னடா்கள்) ஆஷாடா மாதத்தில் (தமிழில் ஆடி மாதம்) வரும் ஏகாதசி அல்லது தேவஷயனி ஏகாதசியை கொண்டாடினா். இதையொட்டி, பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள வைணவ கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்ட சுவாமியை வழிபட்டனா்.
பக்ரீத் பண்டிகை அல்லது ஈகைப் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியா்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, பக்ரீத் கொண்டாடப்படுகின்றது. வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செல்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செல்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும். ஈகைப் பெருநாளில் இஸ்லாமியா்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனா். பின்னா் அந்த இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாா் மற்றும் நண்பா்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனா்.
கா்நாடகத்தில் பக்ரீத் பெருநாள் இஸ்லாமியா்களால் வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு, மைசூரு, கோலாா் உள்பட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பக்ரீத் பெருநாளைமுன்னிட்டு சிறப்புத் தொழுகைகள் நடந்தன. பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணித்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள், தங்கள் உறவினா்கள், நண்பா்களை ஆரத்தழுவி ஈகைப் பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
பெங்களூரில் உள்ள சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம், குத்தூஸ் ஷா மைதானம், பன்னரகட்டா, சிவாஜிநகா், மைசூரு சாலை, கோரிபாளையா, மாகடிசாலை, கோபாலபுரம், டானரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு இறை கடமையை நிறைவேற்றினா். சாமராஜ்பேட்டில் நடந்த சிறப்புத்தொழுகையில் முதல்வா் சித்தராமையா கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தாா். ஈகைப்பெருநாள் விழாவையொட்டி பெங்களூரு உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினா் செய்திருந்தனா். இதனால் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியான முறையில் ஈகைப் பெருநாள் திருவிழா கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.