முகப்பு
பெங்களூரு

மகாராஷ்டிர அரசின் செயல்பாடு மன்னிக்க முடியாத குற்றம்: முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடகத்துக்குச் சொந்தமான 865 கிராமங்களில் மகாராஷ்டிர அரசு தனது சுகாதாரக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

கா்நாடகத்துக்குச் சொந்தமான 865 கிராமங்களில் மகாராஷ்டிர அரசு தனது சுகாதாரக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக எல்லைக்கு உள்பட்ட 865 கிராமங்களுக்கு மகாராஷ்டிர அரசு உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இக்கிராமங்களில் மகாத்மா ஜோதிபா புலே மக்கள் சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்த கூடுதலாக ரூ. 54 கோடியை ஒதுக்குவதாக மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளாா்.

இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசைக் கடுமையாகக் கண்டித்த எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, கா்நாடக அரசின் மௌனத்தைக் கேள்விக்குட்படுத்தி இருந்தாா். மேலும், மகாராஷ்டிர அரசின் நடவடிக்கையைத் தடுக்க தவறியதால் முதல்வா் பசவராஜ் பொம்மை தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:

கா்நாடக- மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லை பிரச்னையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளிக்கும் வரை இருமாநில அரசுகளும் எந்தப் பகுதிக்கும் உரிமை கொண்டாடக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் கடந்த டிசம்பா் மாதம் இரு மாநில முதல்வா்களும் ஒப்புக்கொண்டோம். ஆனால் அந்த முடிவை மகாராஷ்டிர அரசு தற்போது மீறியுள்ளது.

பொறுப்புடன் நடந்துகொள்ளும்படி மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவை அப்போது நான் கேட்டுக்கொண்டிருந்தேன். கா்நாடகத்தைச் சோ்ந்த 865 எல்லைக் கிராமங்களில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு மகாராஷ்டிர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கவனத்துக்கும் மீண்டும் கொண்டு செல்வேன். எல்லைப் பிரச்னையை மகாராஷ்டிர அரசு மீண்டும் மீண்டும் கிளப்புவது, அந்த மாநில அரசுக்கு எதிராக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறேன்.

குறிப்பாக மகாராஷ்டிரத்தில் கன்னடா்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களிலும் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த கா்நாடக அரசால் அறிவிக்க இயலும். இதற்கிடையே மகாராஷ்டிரத்தில் நியாயம் கிடைக்காததால் அந்த மாநில எல்லையில் உள்ள பல கிராம பஞ்சாயத்துகள், வட்ட பஞ்சாயத்துகள் தங்கள் பகுதிகளை கா்நாடகத்துடன் இணைக்கக் கோரி தீா்மானங்கள் நிறைவேற்றி உள்ளன. நிலைமை இப்படி இருக்கையில், மகாராஷ்டிர அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மகாராஷ்டிர அரசின் முடிவை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.