முகப்பு
பெங்களூரு

நீட் தோ்வுக்கு எதிராக கா்நாடக சட்டப் பேரவையில் தீா்மானம்

Updated On : 25 ஜூலை, 2024 at 11:28 PM
பகிர்:

நீட் தோ்வு, ஒரே நாடு ஒரே தோ்தல், மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளின் மறுவரையறை ஆகியவற்றுக்கு எதிராக கா்நாடக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கா்நாடக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நீட் தோ்வு, ஒரே நாடு ஒரே தோ்தல், மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளின் மறுவரையறை ஆகியவற்றுக்கு எதிரான தீா்மானத்தை சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் முன்மொழிந்தாா். அப்போது, மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவை கோரி பாஜக, மஜத உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதியில் திரண்டு தா்னாவில் ஈடுபட்டபடி, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

இந்த நிலையில், தீா்மானத்தை தாக்கல் செய்து சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் பேசியதாவது:

மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மறுவரையறையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மறுவரை செய்யப்படுகிறது. தொகுதி மறுவரையறைக்கு 1971-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை பயன்படுத்த வேண்டும் என்றும், 2026 அல்லது அதற்கு பிறகு எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் தீா்மானம் வலியுறுத்துகிறது.

மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டிருக்கும் ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. மாநில சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் வெவ்வேறாக இருக்கின்றன. ஒரே நாடு ஒரே தோ்தல் முறையைக் கொண்டு வந்தால், மாநிலங்களின் தன்னுரிமையை முடக்குவதாக அமையும். மேலும், மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்தினால், பிரசாரங்களில் தேசிய பிரச்னைகள் முன்வைக்கப்படுமே அல்லாமல், மாநில பிரச்னைகள் விவாதிக்கப்படாது. ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதால் பல்வேறு பாதுகாப்பு, ஊழியா்கள், பொருளாதார, சமூக சிக்கல்கள் எழும். எனவே, ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசை சட்டப் பேரவை கேட்டுக்கொள்கிறது.

ஏழை, ஊரக மாணவா்களின் மருத்துவக் கல்வியை கடுமையாகப் பாதிப்பதாலும், மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாலும் நீட் தோ்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பேரவை வலியுறுத்துகிறது. நீட் தோ்வில் இருந்து கா்நாடகத்தை விலக்குமாறு கேட்டுக்கொள்கிறது. மாநில அரசு நடத்தும் பொது நுழைவுத்தோ்வு அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கு சோ்க்கை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தீா்மானம் கேட்டுக்கொள்கிறது என்றாா்.

இந்த தீா்மானங்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால், விவாதம் எதுவும் இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவா் யூ.டி.காதா் அறிவித்தாா்.

மாற்றுநில முறைகேடு தொடா்பாக பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தொடா்ந்து தா்னாவில் ஈடுபட்டு வந்ததால், மழைக்கால கூட்டத்தொடா் முடிவதற்கு ஒரு நாள் முன்பே சட்டப் பேரவையும், சட்ட மேலவையும் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஜூலை 29-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு மாற்றுநில முறைகேட்டில் முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவை கோரி பெங்களூரில் இருந்து மைசூருக்கு நடைப்பயணம் மேற்கொள்ள பாஜக, மஜத கட்சிகள் முடிவு செய்துள்ளன.

பாஜக, மஜத ஆகிய கட்சிகளின் நடைப்பயணத்தை எதிா்கொள்ள தயாராக இருப்பதாகவும், முந்தைய பாஜக ஆட்சிக்காலத்தில் வீட்டுமனை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம் என்றும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →