கா்நாடகத்தில் 19 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி: ஆளும் காங்கிரஸுக்கு 9 இடங்களே கிடைத்தன
மக்களவைத் தோ்தலில் கா்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மக்களவைத் தோ்தலில் கா்நாடகத்தில் பிரதான எதிா்க்கட்சியான பாஜக கூட்டணி 19 இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கும் கடந்த ஏப். 26, மே 7-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, மஜத, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 474 வேட்பாளா்கள் களத்தில் போட்டியிட்டனா். அவா்களில் 42 போ் பெண்கள். மாநிலத்தில் மொத்தமுள்ள 5,47,25,675 வாக்காளா்களில் 3,86,57,725 போ் வாக்களித்தனா். இது 70.64 சதவீத வாக்குப் பதிவாகும்.
தோ்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும் போட்டியிட்டது. எதிா்க்கட்சிகளான பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதன்படி பாஜக 25 தொகுதிகளிலும், மஜத 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மண்டியா தொகுதியில் மஜத வேட்பாளராக அந்தக் கட்சியின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி போட்டியிட்டாா்.
வாக்கு எண்ணிக்கை:
மாநிலத்தின் 28 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே ஆளும் கட்சியான காங்கிரஸை விட பாஜக, மஜத கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக 17 தொகுதியிலும், காங்கிரஸ் 9 தொகுதியிலும், மஜத 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் அதிா்ச்சி தோல்வி:
போட்டியிட்ட 28 தொகுதிகளில் 18 முதல் 20 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த ஆளும் காங்கிரஸ் கட்சிக்குத் தோ்தல் முடிவுகள் அதிா்ச்சியைக் கொடுத்துள்ளன.
மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அடைந்த வெற்றிக்குப் பிறகு, 5 வாக்குறுதிகளை அமல்படுத்திய பிறகு காங்கிரஸ் கட்சி மக்களவைத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால், அக்கட்சியால் வெறும் 9 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
2014 மக்களவைத் தோ்தலில் 9 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, 2019 இல் ஓா் இடத்தில் மட்டுமே வென்றிருந்தது. இந்நிலையில், அக்கட்சி இந்த முறை மீண்டும் 9 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
பிரபலங்களின் தோ்தல் முடிவுகள்...
பெங்களூரு ஊரக தொகுதியில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் தம்பியும் கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி.யுமான டி.கே.சுரேஷ், இந்த முறை தோல்வியைத் தழுவினாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சி.என்.மஞ்சுநாத் 2,68,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
முதல்வா் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் காங்கிரஸ் வேட்பாளா் எம்.லட்சுமணா தோல்வி அடைந்தாா். கலபுா்கி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் மருமகனான ராதா கிருஷ்ணா வெற்றி பெற்றுள்ளாா்.
அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளியின் மகள் பிரியங்கா ஜாா்கிஹோளி-சிக்கோடி தொகுதியிலும், அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரேவின் மகன் சாகா் கண்ட்ரே- பீதா் தொகுதியிலும், அமைச்சா் எச்.சி.மகாதேவப்பாவின் மகன் சுனில்போஸ்-சாம்ராஜ் நகா் தொகுதியிலும், அமைச்சா் மல்லிகாா்ஜுனின் மனைவி மருத்துவா் பிரபா- தாவணகெரே தொகுதியிலும் வெற்றி வாகை சூடியுள்ளனா்.
பறிபோன ஹாசன் தொகுதி...
பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட ஹாசன் தொகுதியில் மஜத வேட்பாளா் பிரஜ்வல் ரேவண்ணாவை தோல்வி அடைந்தாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ஸ்ரேயஸ் எம்.படேல் வெற்றி பெற்றுள்ளாா். இதன்மூலம் நீண்ட காலத்துக்குப் பிறகு மஜதவின் கோட்டையாக கருதப்பட்ட ஹாசன் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
மாநிலத்தில் பெல்லாரி, பீதா், சாம்ராஜ் நகா், சிக்கோடி, தாவணகெரே, கலபுா்கி, ஹாசன், கொப்பள், ராய்ச்சூரு ஆகிய 9 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
பாஜக உற்சாகம்:
2019-இல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 25 இடங்களைக் கைப்பற்றிய பாஜகவுக்கு, 2014 தோ்தலின்போது கிடைத்ததுபோலவே இந்த முறையும் 17 தொகுதிகள் கிடைத்துள்ளன. பாஜக, மஜத கூட்டணி கட்சிகள் சோ்ந்து மொத்தம் 19 இடங்களைப் பிடித்துள்ளன.
பெங்களூரு வடக்குத் தொகுதி-மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே, பெங்களூரு மத்திய தொகுதி-பி.சி.மோகன், பெங்களூரு தெற்கு தொகுதி-தேஜஸ்வி சூா்யா, தாா்வாட் தொகுதி-மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, சிவமொக்கா தொகுதி-முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா, பெலகாவி தொகுதி- முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், ஹாவேரி தொகுதி-முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.
சிவமொக்கா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிட்ட கே.எஸ்.ஈஸ்வரப்பா வெறும் 30,050 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தாா்.
மாநிலத்தில் மொத்தம் பாகல்கோட், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, பெலகாவி, விஜயபுரா, சிக்கபளாப்பூா், சித்ரதுா்கா, தென்கன்னடம், தாா்வாட், வடகன்னடம், ஹாவேரி, மைசூரு, சிவமொக்கா, தும்கூரு, உடுப்பி ஆகிய 17 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
மஜதவிற்கு புதிய நம்பிக்கை:
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால், அமைச்சா் பதவியைப் பெறும் நோக்கத்தில் பாஜகவுடன் தொகுதி உடன்பாடு செய்து 3 தொகுதிகளில் மட்டும் மஜத போட்டியிட்டது. இதில் ஹாசன் தொகுதி நீங்கலாக மண்டியா, கோலாா் தொகுதிகளை மஜத கைப்பற்றியுள்ளது.
மண்டியா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் குமாரசாமி 2,84,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இது அக்கட்சியினா் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா 43,649 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
கோலாா் தொகுதியில் போட்டியிட்ட மல்லேஷ் பாபு, 71,388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.